உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

-

66

157

யாது செய்தல் வேண்டும்? அவன், “எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர்" 'அவர் உள்ளமே இறைவன் நடம்புரியும் இடம்" என்பது ஆன்றோர் முடிந்த கருத்து. இத் தெய்வத் திருவுருவாய் இலங்கும் பெரியர்களிடத்து அரும்பும் குறையும் உண்டாமோ?

ஒரு மரத்தில் ‘கனி' கவிந்துளது என்றால், காயும், பிஞ்சும், பூவும், அரும்பும், இலையும், வளாரும், கிளையும், அடியும், வேரும் இன்றியோ அம்மரம் இருக்கும்? கனிபெற்ற அளவானே மற்றவையெலாம் பெற்றுள என்பது உறுதியாதல் போல, பகுத்துண்டு பல்லுயிர் ஓம்பும் பான்மை எய்திற்று என்றாலே எல்லா அறங்களும் அவனிடைக் குடி கொண்டுள என்பது பொருளாம்!

இதனால் அன்றே, “கவிஞர் பெருமான் கம்பர் கல்வி முளையாய், கேள்வி கிளையாய், தவம் இலையாய், அன்பு அரும்பாய், அறம் மலராய், இன்பு கனியாய் - கனிந்தது” என்று கூறியுள்ளார்.

உணவினால் வாழ்வது - உரம் பெறுவது - உடல்! உணவின் ஓட்டம் தான், உதிர ஓட்டமாகி உடலகத்து உயிர் உறைகின்றது. ஆகையால்,

“மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே”

என்றுரைத்தார் சீலமுணர்ந்த செந்தண்மைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்.

“உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே

உண்டி முதற்றே உணவின் பிண்டம்”

என்று சாத்தனார்க்கு முன்னாகவே பாடினார், குடபுலவியனார் என்னும் கடனறி புலவர்!

“உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்"

என்றார் பெருமாமுனிவராம் திருமூலர்! உணவீந்து, உடலோம் புதலே உயிரோம்புதல் ஆகலின் பகுத்துண்ணுதல் பிற அறங் களிலெல்லாம் தலையாய அறமாம்.

மற்றொன்று; மனிதன் எதைப் போதும் என்கிறான்? பொன், பொருள், நிலபுலம் போதும் என அமைகின்றனனோ?