உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

இந்த மெய்யுணர்வு நம் நாட்டைப்போல் எந் நாட்டிலும் ஏற்பட்டது இல்லை. அதே நேரம், இம் மெய்யுணர்வுக்கு ஏற்பச் செயலாற்றிச் சிறக்காத ஒரு நாடும் நம் நாட்டைப்போல் இல்லை! காரணம் என்ன? மெய்யுணர்வுக் கொள்கை வாயோடு நின்று விட்டது. கைப்பகுதிக்கு வரவேயில்லை! செயலோடு ஒன்றாத வெறுஞ்சொல் பயன்படுமா? 'வாய்ச்சொல்லில் வீரரடி' என்ற பாரதிக்கு ஒரு கும்பிடு போடுவோம்! ஆ! ஆ! எத்தகைய உண்மை என்று! அவன் குறிப்பை அறிந்து பின்பற்றிச் செல்ல மாட்டோம்! இது நம் பரம்பரையைப் பிடித்த தீவினை என்றாலும் குற்றமில்லை!

விரல் விட்டு எண்ணத்தக்க ஒருவர் இருவர் செயலாற்றினர்; செல்வத்தை நல்வழிக்குச் செலவிட்டு என்றும் வாழும் உயிர்ச் செல்வர் ஆயினர்! பிறர் கள்ளியும், கற்றாழையும், முட்செடியும், நச்சுப் பாம்பும் பற்றிப் படர்ந்து சுற்றிக் கிடக்கும் கொடுங் காட்டின் இடையே பழுத்த பழ மரமாகினர்! பூதங்காக்கும் புதையலாகவோ, வைக்கோல் போரில் படுத்துக்கொண்ட நாயாகவோ இருந்து ஒழிந்தனர்.

அத்திப் பழத்தில் ஒரே இரவில் எத்தனை ஆயிரம் புழுக்கள் உண்டாகி விடுகின்றன. அது உண்டானது எவருக்குத் தெரியும்? வளர்ந்தும், வாழ்ந்ததும் இறந்ததும் எவருக்குத் தெரியும்? இப்படியே உலகில் பிறந்து இறந்து போகின்றோர் எத் துணையர்? இவர்கள் பிறந்தவர்கள் ஆவரோ? இவ்வாறு இறந்தொழியத்தான் இறைவன் மனிதனைப் படைத்தனனோ? அவனுக்கு மனத்தையும், அதன் விளைவாம் பகுத்தறிவையும், மொழியையும் படைத்தனனோ?

அந்தோ! இறைவன் அறத்தின் காவலனாக (தரும கருத்தாவாக) நியமித்ததற்கு அன்றோ ஒருவனுக்குச் செல்வப் பேறு வழங்குகின்றான். இவன் கொடைக் கரத்தால் தான் பேச அன்றோ விரும்புகின்றான். இவன் வாயால் புன் முறுவல் பூக்கஅன்றோ விரும்புகின்றான்! இவற்றுக் கெல்லாம் தடைப் போட்டு ஈயாக் கருமியாக இவ்வுலகில் நிலையாமல் போகும் கயமை எக்கயமைக்கும் தலைமை தாங்கும் தகுதியுடையது எனலாம். நிலையிலா உலகில் நிலைக்க வழி அறிந்திருந்தும் வாய்ப்புகள் ஏற்பட்டிருந்தும் - பயன்படுத்தாது புழுப் பூச்சிகள் போல் மடிந்துபோகும் அறிவின்மை மானிட இனத்தை விடுத்து நீங்கிச் செல்லும் நாளே நன்னாள்! அந்நாள் வருவதற்கு நாடு பாடுபடுமா? நாம் பாடுபடுவோமா?

-