உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

173

இப்பொருள் இல்லாமல் வாழ முடியாது; வாழ்வதும் நாகரிகக் குறைவு என்று எண்ணும் அளவுக்கு இறங்கிவிட்டோம். இக் கொடிய பழக்கங்கள் நம் முதுகின் மீது ஏறிக்கொண்டு நம்மைச் சுமக்க வைத்துவிட்டது. தேவை மிகமிக நம் பாரத்தை மிகப் படுத்திக் கொண்டே போகின்றோம். அது அளவுக்கு மிஞ்சிய நிலையில் நம்மால் தேடிக்கொள்ள முடியாமல் அதன் இடுப்பு ஒடிப்புக்கு ஆளாகிறோம்; நிற்கவும் திறம் அற்றுத் தலையில் கைவைத்துக் கொண்டு உட்கார்ந்து விடுகிறோம் அல்லது படுத்து விடுகிறோம்!

உணவும் உடையும், உயிர்வாழவும் மானங் காக்கவும் தேவை. உயிர் வளர்க்கும் உணவில் ஊட்டச்சத்து வேண்டும். விலைமதிப்பு வேண்டும் என்பது இல்லை; நறுமணமும் இன் சுவையுமே வேண்டும் என்பதும் இல்லை; நாக்குக்கு அடிமை யாகாத உணவே நல்லுணவு என்பர் உடல் நூல் வல்லாரும், உண்மை நூல் வல்லாரும் நாச் சுவை ஒன்றே கருதிப் பணத்தைப் பாழாக்கி, பண்டத்தை வீணாக்கி, உடலையும் கெடுத்துத் தொலைகிறோம். மற்றவர்களும் இதைப் பார்த்துப் பார்த்துப் பழகிப் பழகிக் கெடுகின்றனர். முடிந்த அளவும் பிறரையும் கெடுக்கின்றனர். நாக்கின் தேவை எங்குபோய் நிற்குமோ தெரியவில்லை! யாகாவா ராயினும் நாகாக்க' என்னும் வள்ளுவர் வாய் மொழியும், "காக்கப் படுவன இந்திரியம் ஐந்தினும், நாக்கல்ல தில்லை' என்னும் வளையாபதியாரின் வாழ்வுரையும் சொல்லடக்கம் மட்டும் சொல்ல வந்தன அல்ல; சுவையடக்கம் பற்றியும் சொல்லவந்தனவே!

6

மானம் உடையில் இருக்கிறதா? உடையின் விலையிலே இருக்கிறதா? உடல் வெளிப்படுமாறு மெல்லியதாய் இருப்பதும், தங்கக் கரை, வெள்ளிக் கரை, சரிகை போட்டு இருப்பதும்தான் உடையா? நூறாடைகளை ஓராடையின் விலையில் போட்டுப் பகட்டித் திரிவதுதான் நாகரிகம் என்றால் அந்நாகரிகம் ஒழிக என்று கூச்சல் போடவேண்டியதே அறிவுடையவர்கள் முதல் வேலை. ஏனெனில் அந்நாகரிகம் அநாகரிகமாகி எத்தனை துன்பங்களை உண்டாக்குகின்றன. துன்ப நீக்கம் வேண்டுமென்றால் நாட்டை விட்டுப் போலி நாகரிகத்தை ஓட்டியாகவேண்டும். ஒழித்தாகவேண்டும். அதற்கு முதற்படி மக்களிடம் ‘ஆசை' அகலுதலே! "போதுமென்ற மனமே பொன் செயும் மருந்து" என்னும் பழமொழி எத்தனையோ அரிய கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது எனலாம்!