திருக்குறள் கட்டுரைகள்
207
காணும் ஒருமைப்பாடு வருவது இல்லை மக்களிடம் என்று விளக்கினான். கேட்டவர்களுக்கு விளக்கம் ஆயிற்று. என்றாலும் பின்பற்றிச் சென்றால் தானே!
இந்நாளிலும் சமயப் பிணக்கும் பகையும் நின்றபாடு இல்லை. ஒரே கடவுளை வழிபடுவோர்களிடையேயும், செய்யும் வழிபாட்டு முறையான புற நிகழ்ச்சி ஒன்றே காரணமாய் மாறுபட்டு நிற்பதை நினைக்கும்பொழுது சமயம் தோன்றியும், பின்பற்றியும் மக்கள் அதன் உண்மையை உணரவில்லை என்று தான் ஆகின்றது. ஆனால், திருக்குறள் இந்தச் சமயத்தார்க்கு உரியது என்பது இல்லை. அனைவருக்கும் உரியது; எல்லாச் சமயத்தினரும் ஏற்றுப் பின்பற்ற வேண்டிய உயர் நலங் கனிந்த கொள்கைகளையே உரைக்கின்றது. 'கொள்கைச் சமயம்' ஒன்றே அதன் குறிப்பாக இருப்பதால் 'பொது மறை' என்னும் தகுதியைப் பெறுகின்றது.
சமயத்தின் அகக் கோட்பாடுகள் வற்புறுத்தப் பெறும் நூலுக்கு உரியர் இன்னார் என உண்டா? அன்பு, அருள், அறம், பணிவு, நடுவுநிலைமை, கொல்லாமை, கள்ளாமை, பொய்யாமை, வாய்மை இன்னவாறான கோட்பாடுகள் எச்சமயத்திற்குச் சொந்தம்? இவற்றை வேண்டாச் சமயமும் உண்டோ? வேண்டா ஒன்று சமயமும் ஆமோ? இவற்றை வலியுறுத்தித்தானே சமயங்கள் கிளர்ந்தன. இவற்றுக்கு உலைவைத்துவிட்டுப் புறக் கோட்பாடுகளைப் போற்றிவரும் சமயம் சமயம் அன்று; சமயப் பெயருக்கும் இழுக்கு! சமயத்தைத் தோற்றுவித்தவர் நோக்கத் திற்கும், வளர்த்துவிட்டவர் நோக்கங்களுக்கும் முரண்!
பொதுமறையெனத் தகும் புகழ்மிகு திருக்குறள் உலகமெலாம் பரவிற்றோ - பொதுமை நலங்கனித்துள்ளதாயின் பூவுலகளவும் வளையமிட வேண்டுமே என்னுங் கருத்து சிலருள்ளத்து எழலாம்.உலக மேடையில் ஒரு சிறிதே திருக்குறள் காட்சி அளித்து இருக்கலாம்;சிறிய கதிர் ஒன்றையே காட்டி ஒளிவிட்டு இருக்கலாம். அது குறள் நூலின் தகுதிக்குக் குறைவு தருவது ஆகாது.குறள் நூல் எழுந்த மொழியின் தகுதிக்குக் குறைவு தருவதும் ஆகாது. குறள் நூலைப்பெற்ற மொழியினரின் தகுதிக் குறைபாடே ஆகும். ஆங்கிலம் உலகமொழியாயது. ஆங்கிலேயர் தகுதியாலேயே! ஆங்கிலத்தின் தகுதியால் அன்று தகுதிமிக்க தமிழும், தமிழில் முகிழ்த்த திருக்குறளும் உலகச் செல்வம் ஆகாமை தமிழர் தகுதிக் குறைவாலேஅன்றி வேறன்று.