உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208

உலக நூல்

இளங்குமரனார் தமிழ்வளம் - 9

திருக்குறள் குறுகியுள்ள தமிழ் நாட்டில் தோன்றியது என்றாலும், உலக அளவிலே விரிந்து நின்றே முழங்குகிறது. அதன் தொடக்கமே உலகக் கண்ணோட்டத்தில் உள்ளதை அறியார் யார்? உலகில் தொடங்கும் அது உலகாகவே வளர்ந்து முதிர்ந்து நிலைபெறுவதை ஒருமுறை மேலோட்டமாகப் பார்ப் பவர்களும் அறிவர். உலகப் பெருநிலை அளவிலிருந்து குறுகிய அளவில் இறங்குதல் குறளகத்து இல்லை. ஒருநூல் உலகத்தோர் அனைவரையும் உட்கொண்டு செல்லுவது ஆயின் அதன் விரிந்த பாங்கு எவ்வாறாக இருத்தல் வேண்டும்!

"வையத்தார் உள்ளுவ வெல்லாம் அளந்தார்" என்கிறார் புலவர் பரணர். “எல்லாப் பொருளும் இதன்பால் உள" என்கிறார் மதுரைத் தமிழ் நாகனார். "வேறு நூல்கள் கற்கவேண்டா; இந்நூல் ஒன்றே போதும்" என்று தெளிந்து கூறுகிறார் நத்தத்தனார். “பிற நூல்களின் பயன் அனைத்தும் ஒருங்கு தொகுக்கப்பட்டுள்ள இடம் திருக்குறள்" என்கிறார் களத்தூர் கிழார். “திருக்குறள் நூல் ஒன்றைக் கற்றால் போதும். மக்கட்கு வேண்டுவது; வேண்டாதது இது; என்று அறிதல் எவருக்கும் எளிதாக முடியும்" என்கிறார் செயிர்க் காவிரியார் மகனார் சாத்தனார்.

புலவர் திருவள்ளுவர்

இத்தகைய சிறப்புடன் ஒரு நூல், அமைந்து கிடக்குமாயின், அதனை அமைத்தோன் எத்தகையனாதல் வேண்டும்; அவன் புலமை எத்தகைத்தாதல் வேண்டும் என்று இறும்பூதுடன் எண்ணுகிறார் ஒரு புலவர். ஒரு முடிவுக்கும் வருகின்றார். “எந்தப் புலவர்க்கும் வாராத் திறம் வள்ளுவர்க்கே அமைந்துள்ளது; அவரே புலவர் புலவர் தலைவர்! உலகில் புலமையுடையோர் அனைவரும் புலவர்களே எனினும் 'புலவர்' என்றால் திருவள்ளுவர் ஒருவரையே குறிக்கும்” என்கிறார். இப்படிக் கூறியபுலவர் மதுரைத் தமிழாசிரியர் செங்குன்றூர் கிழார்.

-

முதற் பாவலர் திருவள்ளுவர்

66

'புலவர்களைப் பாவலர்கள் என்றும் கூறுவர்; பிற புலவர்களெல்லாரும் பாவலர்கள் என்றால், திருவள்ளுவர் 'முதற் பாவலர்' ஆவர்" இவ்வாறு உரைக்கிறார் ஆசிரியர் நல்லந்துவனார். இன்னொருவர் வள்ளுவரை ‘மன் புலவர்’ என்கிறார்; புலவர்களுக்கு மன்னர் என்பது அவர் கருத்து.