உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

219

அடுத்த பாடலிலேயே, ‘கற்றதனால் ஆய பயனென் கொல்' என்கிறார். கல்வியின் பயன்இன்னது என்று ஆற்றொழுக்காகச் சொல்லிச் செல்வதினும், “கற்றதினால் பயன் உண்டோ?" என்று நெஞ்சில் பதியுமாறு இடித்து வினவுவது வள்ளுவரின் 'உளவியல்' ஆராய்வுக்கு எடுத்துக்காட்டாக இலங்குகின்றது.

‘கற்றதனால் பயன் என்ன?' என்று உந்தும் உணர்ச்சியை முந்தியெழச் செய்து சிந்தனைத் திறத்தை மிகுவித்து, வாலறிவன் (இறைவன்) நற்றாள் தொழாஅர் எனின் என்று முடிப்பது உளவியலை ஆராய்ந்து, கேட்போர் நெஞ்சில் நிலைக்குமாறு அழுத்திக் கூறும் பெருந்திறத்தைக் காட்டுவதாம்.

கடவுளை வணங்குதல் கற்பவர்கடன்; கடவுளை வணங்குதலின் பயன்? இவ்வினாவுக்கும் விடை அளிக்கின்றார் அடுத்த பாடல் தொடங்கி:

“நிலமிசை நீடு வாழ்வார்" "யாண்டும் இடும்பை இல

"இருவினையும் சேரா"

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர்”

இவ்வாறாக அடுக்கி யுரைக்கின்றார்.

வள்ளுவர் நூல் மாண்பு மிகுநூல்; அது இனிக்கும் நூல்; இலக்கிய வளம் செறிந்தது; எளிமையும் தெளிவும் இலங்குவது; ஆராயுந்தோறும், ஆராயுந்தோறும் புதுப் புதுப் பொருள்களை நல்குவது; அறத்தின் அச்சாணியாக இலங்குவது எல்லாப் பொருளையும் தன்னகத்து அடக்கியது; சமயப் பொதுமையானது; காலவெள்ளம் கடந்தது; கல்விப்பேற்றை நல்குவது; கல்வியின் முடிந்த பயனையும் காட்டுவது; வாழப் பிறந்தோர்க்கு என்றே வகுக்கப் பெற்றது. ஆதலின் திருக்குறள் தெய்வ நூலேயாம்.!

தெய்வ நூலாம் திருக்குறளை ஓதாதவர்கள் "நாவிற்கு உயல் இல்லை; சொற்சுவை ஓர்வில்லை; மற்றுஞ் செயலில்லை: என்றார் உறையூர் முதுகூற்றனார். “நா, இன்சொல் வழங்கி இன்புறாது; நெஞ்சம், நல்லன நினைந்து இன்புறாது; உடல், பணிபுரிந்து மகிழாது" என்பது அவர்தம் கருத்தாம்.

இக்கருத்தில் ஊன்றினார் இன்னொருவர் புலவர்; அவர் அரசர்; உக்கிரப்பெருவழுதியார் என்பது அவர் பெயர். உலகை