8. கதவு இல்லாத வீடு
துளியும் வெளியேறாவண்ணம் நீரைத் தடுத்து நிறுத்தும் அணைகள் உண்டு.
சிறிதும் வெளிப்போகா வண்ணம் சிக்கெனச் செறித்து வைக்கும் காற்றடைப்புகள் உண்டு.
வெளிச்சம் ஊடுருவி வெளிப்படா வண்ணம் அமைந்த திண்சுவர்களும், அழுத்தத் திரைகளும் உண்டு. எக்சுக் கதிர்கள் (X RAY) ஊடுருவா வண்ணம் பூச்சமைந்த சுவர்கள் உண்டு.
உள்ளிருக்கும் மணமும் நாற்றமும் சற்றும் புறம்போகா வண்ணம் மூடிவைக்கும் செப்புகள் உண்டு.
சல்லிக் காசும் செலவிடாமல் பேயாகக் கட்டிக் காத்துப் பேரர்களுக்கும் பயன்படாமல் மண்ணில் புதைத்து, மண்ணுக்கு இரையாகி மாயும் பேர்வளிகளும் உண்டு.
பந்தயக் குதிரைகளையும், மஞ்சுவிரட்டுக் காளைகளையும், மதயானையும் நகரவிடாமல் தடுத்து நிறுத்தும் உரனுடை யவர்களும் உண்டு.
ஆனால் ஒன்றே ஒன்றை மட்டும் அடக்கிக் காக்க முடியாது; வெளிக்காட்டாமலும் இருக்க முடியாது. அந்த ஒன்று மட்டும் உள்ளத்தே அமைந்து-உண்மையாகவே-உயிராகவே அமைந்து- இருந்தால்!அந்த ஒன்று யாது?
மலையும் ஆறும் காடும் நிலமும் அரணாகக் கொண்டு நாட்டைக் காப்பர்.
கோட்டை கட்டியும் அகழ் வெட்டியும் கோநகரைக் காப்பர். சுற்றுச் சுவர் எழுப்பியும் காவலாள் வைத்தும் பெரு மனைகளைக் காப்பர்.
கொல்வது போலும் வறுமைக்கு ஆளாகி நொடி தோறும் செத்துச் செத்துப் பிழைத்திருக்கும் ஏழையரும் கதவாலும் பூட்டாலும் வீட்டைக் காப்பர்.