உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

35

காவல் மிகுதியைக் காட்டுவதற்கு அமைந்தவை தாமே இந்நாள் இருப்புப் பெட்டிகளும் நுண்வினைப் பூட்டுகளும் நிலவறைகளும்!

காவல் மிக்க உலகத்திலே காவல் எதற்கும் கட்டுப்படாது நிற்கும் பொருள் உண்டா? உண்டு! அஃது எது? அதுவே அன்பு!

சடையப்ப வள்ளல் பெருமனைக்கு நெடுங்கதவு உண்டு. அந்நெடுங் கதவினைப் பூட்டுவது இல்லை; ஏன்? பூட்ட வேண்டாத அளவுக்கு இரவும் பகலும் கொடை நடக்கும்! மற்றொன்று பொருள் போகி விடும் என்ற அச்சம் இல்லாமையால் பூட்டிக் காக்க வேண்டியது இல்லை. விரும்புபவை எவையோ அவையனைத்தையும் தடையாதுமின்றிக் தந்து அன்பால் தழுவி அனுப்பும் சடையன் வீட்டிலா களவு போகும்? சடையப்பர் உள்ளங்கவர் கள்வர் ஆதலால் பொருட் கள்வருக்கு வேலை யில்லை. அடையா நெடுங்கதவு அவர் மனைக்கு அடையாள மாயிற்று!

வீட்டுக்குக் கதவு இருந்தால் போதுமா? கதவினால் என்ன பயன் ‘தாழ்' இல்லாவிட்டால்? தாழ்தான் கதவின் உயிர்ப்பு; கதவின் பயன்; கதவின் காவலாள்!

சடையன் வீட்டில் கதவு உண்டு; கதவுக்கு தாழும் உண்டு; ஆனால் அடைப்பது மட்டும் இல்லை. அன்புறையும் உள்ள வீட்டிற்குக் கதவும் இல்லை தாழும் இல்லை! வாயில்கள் உண்டு! அவை தாம் கண்கள்!

இமைகள் கதவுகள் ஆகாவா? ஆம் ஆம் இமைகள் கதவுகள் ஆகலாம்; மேலும் கீழும் அடைத்து மூடும் இரட்டைக் கதவுகள் தாம் அவை அக்கதவுகள் தூசி தும்புகளை உள்ளே புகாமல் காக்கும் கதவுகளே அன்றி, உள்ளே உள்ள அன்பினை வெளிக் காட்டாத இறுக்கக் கதவுகள் அல்ல! அன்புணர்வை நொடிப் பொழுதுகூட வெளிப்படுத்தத் தடையாகும் பிழைபட்ட கதவுகளும் அல்ல! இவ்வாறானால் இமைக் கதவுகளை வீட்டுக் கதவுகளுக்கு இணையாகக் கூற முடியுமா?

என்புருகி நெஞ்சம் இளகிக் கரைந்துகரைந்து அன்புருவாய் நிற்க அலந்தேன் பராபரமே!

அன்பர்பணி செய்யஎனை யாளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந் தெய்தும் பராபரமே!