திருக்குறள் கட்டுரைகள்
45
உலகம் பெருங் குடும்பம்; உலகக் குடும்பத்து உரிமைத் தலைவர் இறைவர்; நாம் அவர் தம் கால் வழியினர்! என்றாலும் அவர் தம் உரிமைப் பாட்டை உணர்ந்து பயன்படுத்தாமல் மனம் போனபடி எண்ணி, வாய் போனபடி பேசி வாழ்கிறோம். கனிகளைச் சுவைக்க விடுத்துக் காய்களைத் திருடிக் கெடுகிறோம். இயற்கையாய் அமைந்த இனிய சொற்களை விடுத்து, தனக்கும் பிறருக்கும் இன்பம் தராத-மாறாகத் துன்பந்தரக்கூடிய சொற்களைச் சொல்கிறோம். இது கனியிருப்பக் காய் கவர்வது இல்லையா?
பூக்களில் இருக்கும்பொழுது தேன் தூய்மையும் நறுமையும் உடையதாக இருக்கிறது. ஈக்களால் கூட்டுக்குக் கொண்டு வந்த போதும் அவ்வாறே இருந்தது. ஆனால் கடைக்கு வந்தபோது தேனும் ‘கடை’யாகி விட்டது! நிறத்தில் மாற்றம்; மணத்தில் மாற்றம்; சுவையில் மாற்றம்; ஏன்? நாற்றமும் கூடச் சேர்ந்து விடுகின்றது. மனிதன் தன் நலத்துக்காகத் தான் தேனின் நறுஞ்சுவையைக் கெடுக்கின்றான். இப்படியே தான் இன் சொல்லை வன்சொல்லாக்கி வாயினை நாற வைக்கிறான்.