உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

இளங்குமரனார் தமிழ்வளம் 9

மறைந்து திருடும் திருடரைச் கண்டுபிடித்துத் தண்டிக்கக் காவலாளிகள் உளர். ஆனால் கண்காண நேரில் திருடிக் கொண்டே வாழும் வெள்ளைச் சட்டைக் 'கருஞ்சந்தை’க் காரர்களைக் குற்றக் கூண்டேற்ற வழியில்லை! வழியிருந்தாலும் வாய்ப்பு இல்லை! குற்றவாளி ஆக்காமல் இருக்கும் குற்றத்தோடு நிற்காமல்,புகழ்ந்து பேசிப் புடைசூழ்ந்து வாழ்வதும் 'இயற்கை'யாகி விட்டது. எல்லாம் பணத்தின் ‘திருவிளையாடல்'. பண்டமாற்று பணமாற்றாக என்று உருவெடுத்ததோ அன்றே அறத்தின் தலையில் மண் விழுந்துவிட்டது.

உலக நலங்கருதிச் செய்யவேண்டியது தூய வணிக நெறியிலே, நடுவு நிலைமைக்கு எடுத்துக் காட்டாம் சமன் கோலை வைத்துக்கொண்டு அறக்கேடு செய்தல் கூடாது. அவர்கள் செய்தாலும், அறங்கூறும் பெரியராகிய நடுவர்கள் (நீதிபதிகள்) செய்தல் கூடவே கூடாது!

நடுவு நிலை நிற்கவேண்டியோர் சிறு பிறழ்ச்சிக்கு உள்ளத்தே இடந்தருவர் ஆயினும் அது பெரும் பெரும் கேடுகளாகச் சூழலாம். இறைவன் திருமுன்னிலை போல்வது நீதிமன்றம்! அறக் கடவுளே உருக் கொண்டு வந்து திருத்தொண்டு புரிவது போல்வது அவர்கள் பதவி! சாட்சிகளோ, வழக்குக்கு ஆட் பட்டவர்களோ உணர்ச்சிவயப்பட்டுப் பொல்லா உரைகள் புகல்வர் ஆயினும் அவர்கள் சொல்லுக்கு மதிப்புத்தராது, தனது மான உணர்ச்சிக்கும் மதிப்புத் தராது குற்றத்தை முறையுற ஆய்ந்து முறை வழங்க வேண்டிய சால்பினதே நடுமைப் பணி!

பொருளுக்கும், புகழுக்கும், பதவிக்கும், படிப்பிற்கும், இனத்திற்கும், நிறத்திற்கும், கட்சிக்கும், சாதிக்கும் வேற்றுமை காட்டாமல் எல்லா உயிர்களின் மாட்டும் ஊடகமாக ஓடிக் கொண்டிருக்கும் ஒரே ஓர் 'அறக் குருதி' ஓட்டத்திற்கு காப்பளிக்க என்றே வாய்ந்தவர் நடுவர்! இத்தகையர் எத்தகு நடுவு நிலை பேணுதல் வேண்டும்? அவர்களின் ஒரு சொல் கொல்லவும் செய்யும்; உயிர் ஊட்டவும் செய்யும் என்றால் அச்சொல்லின் மதிப்புத்தான் என்னே! ஆம்! “சொல்லே இறைவனாக இருந்தது; இறைவனோடு இருந்தது” என்னும் மணிமொழிகளைப் போற்றி வாழ்வோரே நடுவு நிலை நாடும் சான்றோர்!

இதனை வற்புறுத்த விழைந்த சான்றோர் பலர். அவர்களுள் வள்ளுவனார், நடுவு நிலையைக் கண்முன் காட்டும் சமன்கோல் கொண்டு நிலைநாட்டினார். 'கூரிய துலைநாக்கு நேர்நின்று