உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

59

செம்மை காட்டுகின்றது. அதுபோல் அறவோர் செந்நாவும் நடுநிற்க வேண்டும்." என்பது அவர்தம் கருத்து.

நீதிநெறியில் நெஞ்சம் நிலைத்த சான்றோர் சிலர் ஒரு கற்பனைப் படைப்புச் செய்துளர். அது "நீதி தேவன் குருடன்; அவன் கையில் சமன்கோல் இருக்கும்” என்பதே.

இக்கற்பனை காட்டுவது யாது? “கண்ணோட்டம் காட்டி அறந்திறம்பி விடக்கூடாது” என்பதேயாம்.

புலவர் மணிகள் சிலர், “நடுவுநிலை கைவிட்ட அமைச்சன் சொல்வழி நிற்கும் வேந்தன் கோல் சுடுவதுபோன்ற வெங்கதிர் சுடுகின்றது" என்றும், “நடுவு நிலை பிறழ்ந்தவர்கள் இல்லிலே வேதாளம் சேரும் வெள்ளெருக்குப் பூக்கும், முள்செடி முளைக்கும், மூதேவி வாழ்வாள், பாம்பு குடியிருக்கும்" என்றும் நயம்பட உரைத்தனர்.

"அறிவான் முதிர்ந்த ஆன்றோர்கள் உளர்; பண்பான் முதிர்ந்த சான்றோர்கள் உளர்; இவர்கட்கு ஓர் அணிகலம் இல்லையேல் பெற்றிருக்கும் அறிவாலும் உற்றிருக்கும் பண்பாலும் ஒரு பயனும் இல்லை. அந்த ஓர் அணிகலம் நடுவுநிலை என்பதே " என்பது அறநூலின் நடுவுநிலைத் தொகுப்புரை.

“சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி."