17. பொறுக்க முடியாதா?
தண்ணீரில் கண்ணுக்குத் தோன்றாத எண்ணரிய நுண்ணிய உயிர்கள் உறைகின்றன. அவை சிறியவை எனினும் அரிய மனித உயிரை உண்டு ஏப்பமிட வலியன. ஆதலால் தூய நீர் பருகுதல் வேண்டும்; காய்ச்சி வடித்துப் பருகுதல் நலம். இது உடல் நலம் காக்கும் நெறி. இதனைத் தெளிவாக உணர்ந்த பெரியோர் “தாயைப் பிழைத்தாலும் தண்ணீரைப் பிழையாதே" என்றனர். உணராத் தன்மையுடையோர், பழமொழியைத் "தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழியாதே" என்றனர். தண்ணீரைப் பழிக்கக்கூடாது எனப் பொருள்கொண்டு, எத்தகைய அழுக்கு நீரையும் பருகுதல் வேண்டும் எனக் கருதி விட்டனர். தூயநீர் போற்றுவதற்கு எழுந்த பழமொழியே அழுக்கு நீர்ப் புகழ்பாடக் காரணமாயிற்று. மொழிக் கோளாறா? மூளைக் கோளாறா?
குடிநீர் தூயதாக இருக்கவேண்டும்; குளிக்கும் நீர் எப்படியும் இருக்கலாமா?
நாம் நன்றாக அறிவோம், நன்னீராற்றில் நீராடும் பொழுது ஏற்படும் இன்பமும், கண்ட வெல்லாம் அடித்துச் செல்லும் காட்டாற்றுப் பெருக்கில் நீராடுங்கால் ஏற்படும் அருவருப்பும்!
பூம்புனல் பொருநை ஆற்றில் நீராடுதற்கும் கூவம் ஆற்றில் (சாக்கடை ஆற்றில்) நீராடுதற்கும் வேறுபாடு இல்லை என்று பித்தரும் கூறார். மூக்கைத் துளைத்து, மனத்தைக் குமட்டி, குடரைப் பிடுங்கும் அழுக்காறு எங்கே?
“செந்தமிழும் சந்தனமும் திசையெல்லாம் பரிமளிக்க மந்தவளி யுமிழ்மலய வளர்குடுமி நின்றிழிந்து கொந்தவிழு மலர்வீசிக்’
கன்னிநடை போட்டுச் செல்லும் இனிய பொருநை (தாமிர வருணி) ஆறு எங்கே!
ஆனால், ஒருவன் யான் பொருநை ஆற்றில் நீராட விரும்பினேன்; அது எனக்கு இன்பம் அளிப்பதாய் இல்லை;