உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 9.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குறள் கட்டுரைகள்

83

தூய்மை தருவதாய் இல்லை: கூவம் ஆறே இன்பமும் தூய்மையும் தருகின்றது என்றான் ஆனால், அவன் கூவத்திற்கு அண்மையிலுள்ள கீழ் பாக்கத்தில் இருக்கத்தக்கவன் ஆகவேண்டும்; அல்லது, பொய்யாப் பொருநையைத் தரும் குற்றாலத்திற்கு அனுப்பப்பட வேண்டியவன் ஆக வேண்டும்.

என்ன சொன்னாலும் சரி; கூவம் ஆற்றில் குளிப்பதை விரும்பாவிடினும் ஆங்குக் குளிப்பவர்களே மிகுதி; பொருநை ஆற்றை விரும்பினாலும் ஆங்குக் குளிக்காதவர்களே மிகுதி. என்ன, வேடிக்கையாக இருக்கிறதா? அல்லது எழுதுபவருக்கு ஏதாவது...! என்று தோன்றுகிறதா?

முன்னைச் சொல்லியது உண்மையே! உவமை அது; பொருள் வருமாறு:

நன்னீர்ப் பொருநை - பொறுமை!

சாக்கடைக் கூவம் - பொறாமை!

பொறாமை எனினும் அழுக்காறு (அழுக்கு + ஆறு) எனினும் ஒன்றே. இந்த அழுக் காற்றிலே, இழுக்க மிக்க அழுக்காற்றிலே குளிக்காதவர் எவர்? நெஞ்சைத் தொட்டு நேரிய பதில் மொழி யட்டும்! பொறாமை யில்லாதவர் அடிகள் என் முடிமேலன!

கூவத்தில் குளிப்பதா? சாக்கடையில் நீராடுவதா? என்று வெறுப்பவர்களும், அழுக்காற்றில் மூழ்காது, நீந்தித் திளையாது இருப்பது இல்லை என்றால், இவ்வாறு நல்லாறு அன்று; அழுக்காறு என்று பெயரிட்டதன் பயன்தான் என்ன?

ஆறு என்னுஞ் சொல்லுக்கு நெறி, வழி என்னும் பொருளும் உண்டு. நாம் இரண்டு வழிகளை எடுத்துக் கொள்வோம். ஒன்று நல்வழி-அதாவது தக்க சாலையும், நீரும் நிழலும் சத்திரங்களும் மைல்கல்களும் வழிகாட்டி மரங்களும் உள்ளவழி. மற்றொன்று தூசியும் தும்பும், காடும் மேடும், ஓடையும் உடைப்பும், மலமும் சாணமும் நிறைந்து மூக்கைப் பிடிக்கவும், மூட்டுகளைப் பெயர்க்கவும் செய்யும் வழி. நல்வழிச் செல்வதா? நாற்ற வழிச் செல்வதா?

அதிலும் நல்வழியே ஊருக்குச் செல்வதாய் இருக்க, நாற்றவழி புலி கரடி வாழும் பொல்லாக் காட்டுக்குச் செல்வதாய் ருந்தால்? நீராற்றை எண்ணினாலும் சரி, நெடுவழியை எண்ணினாலும் சரி! போகவே போகிறோம்; நீந்தவே நீந்துகிறோம்— நல்லாற்றை நாடினால் என்ன? அழுக்காற்றை விட்டால் என்ன?