பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கோ அடிகள் சமயம் எது? 9



உண்மைதான். இந்தச் செங்குட்டுவன் பதிற்றுப்பத்தில் பேசப்படும் 'கடல் பிறக்கோட்டிய செல்கெழுகுட்டுவன்' என்றும் நினைப்பதற்கில்லை. காரணம் நான்கு பாடல்களில் குட்டுவனுடைய கடற்படைப் பெருமை பேசப்பெறுகிறது. அதே பதிற்றுப்பத்தில் சிலப்பதிகாரம் கூறும் இவனுடைய இமயப் படையெடுப்புப் பற்றி ஒரு சொல் கூட இல்லை. சிலம்பில் அவன் கடற்படை பற்றி ஒரு சொல் கூட இல்லை. இவ்விரண்டையும் கொண்டவன் ஒருவன் என்றால் இவ்விரு நிகழ்ச்சிகளில் ஏதாவது ஒன்று முன்னும், மற்றொன்று பின்னரும் நடைபெற்று இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் இருக்க, பதிற்றுப்பத்து கூறும் செல்கெழுகுட்டுவனும் சிலம்பு கூறும் செங்குட்டுவனும் வெவ்வேறானவரோ என்று நினைக்கத் தோன்றுகிறது. இளங்கோவைப் போன்ற ஒரு மாபெரும் கவிஞர் செல்கெழுகுட்டுவனின் தம்பியாக இருந்திருப்பின் பதிற்றுப் பத்தின் பாடல்கள் இளங்கோவைப் பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசாமலா இருக்கும்!

இஃது இவ்வாறு இருக்க, பதிகம் இளங்கோ தமக்குரிய அரசைத் துறந்து குணவாயிற்கோட்டத்தில் இருந்தார் என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று தெரியவில்லை. பதிக ஆசிரியர் ஏதோ ஒரு காரணத்தால் இளங்கோவையும் சிலம்பின் பாட்டுடைத் தலைவனாகிய கோவலனையும் ஜைனராகக் காட்ட முயன்றுள்ளார். இளங்கோ என்பவர் அரசைத் துறப்பதற்கு உரிய காரணத்தைப் பதிகத்தில் புகுத்த இடமில்லை என்பது தெளிவு. அப்படியானால் நிமித்திகனையும் அவனுடைய எதிர்கால நோக்கையும் சொல்வதற்கு இடமில்லை என்று தெரிந்த பதிக ஆசிரியர் மிக்க துணிவோடு சிலப்பதிகாரத்தின் இறுதிக் காதை யாகிய வரந்தரு காதையில் இடைச் செருகல் செய்துள்ளார். அது பற்றிப் பின்னர் விரிவாகக் காணலாம்.

பதிகத்திலோ நூலிலோ எந்த ஒர் இடத்திலும் தெளிவாகப் பேசப்படாமல் இருக்கும் இளங்கோவடிகளைச் சமண