பக்கம்:இளங்கோ அடிகள் சமயம் எது.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 அ.ச. ஞானசம்பந்தன் மனைவியைப் பொறுத்தவரை வீட்டுவேலை செய்யும் பணிப்பெண் ஆகவும், தன் உடல் தேவையைப் பூர்த்திசெய்யும் கருவி யாகவுமே கருதியிருந்தான். எனவே அவனைவிட்டு நீங்கி கயிலை செல்வது அம்மையாருக்கு எளிதாயிற்று. இந்த நிலையில், இந்த இரு பெண்மணிகளும் இப்பிறப்பிலேயே வீடுபேற்றை அடையக் கூடிய தனிச்சிறப்பைப் பெற்றிருந்தும், ஏன் தங்களுடைய தனித்துவத்தைக் காட்டாமல் வாழ்ந்தனர் என்ற ஐயம் சிலர் மனத்திலாவது தோன்றலாம். கண்ணகியும் அம்மையாரும் ஏதோ அடிமைகள்போல் வாழ்ந்தனர் என்று நினைத்தால் அது பெருந்தவறாகும். இவர்களுடைய கணவன்மார்கள் எப்படியிருப்பினும் இவர்களைப் பொறுத்தமட்டில் அன்பு கடமை, குறிக்கோள் என்ற மூன்றிலும் முழுத் தன்மை பெற்றவராக வாழ்ந்தனர். கணவனிடத்தில் அன்பு செலுத்தும் கண்ணகியும், அம்மையாரும் அந்த அன்பு தம்தம் கணவன் மார்களால் திருப்பிச் செலுத்தப்படுகிறதா என்று சிந்திக்கவே இல்லை. உண்மையான அன்பின் இலக்கணம் அதுதான். கண்ணகியைப் பொறுத்தவரை, கனவன் உயிரோடு இருக்கின்ற வரை தனக்கென்று ஒரு வாழ்வையோ, செயலையோ மேற் கொள்ளவில்லை. கணவன்தான் செலுத்தும் அன்பைத் திருப்பிச் செலுத்தவில்லையே என்று ஒருகணம் நினைந்து இருப்பாளே யானால் அவள் பொற்புடைத் தெய்வமாக ஆகி இருக்க மாட்டாள். இது தெய்வீகத் தன்மை என்று சொல்லப்படும். உயிர்கள் தன்னிடம் அன்பு செலுத்தவில்லை என்ற காரணத் திற்காக இறைவன் உயிர்கள் மாட்டுக் கருணை செலுத்தாமல் இருப்பதில்லை. எனவே திருப்பி செலுத்தப்படுவதைப் பற்றி சிந்திக்காமல் அன்பு செய்வதை தெய்வீகத் தன்மை என்று சொல்கிறோம். இக் கருத்து காரைக்கால் அம்மையாருக்கும் பொருந்தும்.