பக்கம்:இளமையின் நினைவுகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாட்டியின் அறிவுரை

21


என்ற பாட்டு இன்னும் முடியாமல் சென்றுகொண்டே இருக்கிறது. ஆனால் இதுவரை தான் இன்று எனக்கு நினைவு இருக்கிறது. ஒரு பெண் தவளை வெளியே சென்ற ஆண் தவளை திரும்பிவராத வருத்தத்தில் பாடிய பாட்டாம் இது. தவளை பேசுமா? எனக்குச் சிரிப்பு வரும். பாட்டி அதற்கு உரை சொல்லுவார். ஆண் தவளை வந்தால் குளிக்க வெந்நீரும் விசிப்பலகையும் போட்டு வைத்ததாம். ஆனாலும் ஆண் தவளை வரவில்லை. அது மாண்டுவிட்டதாக முடிவு கட்டிவிட்டது பெண். கோட்டைக்குப் போயிற்றாம். வரும் வழியில் என்ன ஆபத்தோ தெரியவில்லை என்கிறது. மாடுகள் மிதித்துக் கொன்றுவிட்டதோ, சேற்றுக் குவளையிலே சிக்கி மாண்டதோ, அல்லது ‘பொன்னு ரத’மாகிய காக்கை காலையும் வயிற்றையும் கொத்திக் கொத்தி ஆகாயத்தில் தூக்கிச் சென்றதோ என்று பெண் தவளை வருந்துகின்றதாம். உயரப் பறப்பதை பொன்னுரதமாகச் சொல்லுகிறது, பொன் இரதத்தில் நல்லவர் ஏறிப் பொன் உலகம் செல்வார்கள் ஆதலால், ‘பாட்டி அந்தத் தவளைப் பாட்டெல்லாம் நமக்கு எதற்கு’ என்பேன் நான்.

பாட்டி சாவதானமாகச் சொல்லுவாள் ‘குழந்தாய் தவளை அப்படிப் பாடுமா? பாடாது. யாரோ பாடினார். நான் அதைக்கேட்டு உனக்குச் சொல்லுகிறேன். இது எதற்காகச் சொன்னார்கள் என்றால் நமக்காகத்தான். வெளியே சென்ற தவளை வீடு திரும்பவில்லை. எந்த நேரத்திலோ சாவு பிடித்துக்கொண்டது. மனிதன் வாழ்வும் இப்படித்தான். இவன் என்றைக்கும் இருப்பானா? வெளியே சென்றவன் வீடு திரும்புவானோ வரமாட்டானோ? யார் கண்டார்கள். எந்த வேளையிலும் சாவு வரும். மனிதன் செத்து விடுவான். ஆகையினால் அவன் இருப்பதற்குள் நல்ல காரியங்களைச் செய்ய வேண்டும், என்று அறிவுரை கூறி நீதி புகட்டுவார்கள்.