உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீட்டு நெருப்பை அயலாருக்குக் கொடுக்காதே

19

கையை உதறி விட்டு, பணியாளரை அழைத்து, “அடே! இதை எடுத்து விடுங்கள்‌. இந்தப்‌ பெண்ணை வெளியே பிடித்துத்‌ தள்ளுங்கள்‌,” என்று கூவினார்‌.

விசாகை பெரிய இடத்துப்‌ பெண்‌. இந்தச்‌ செல்வனை விடப்‌ பன்மடங்கு செல்வத்தில்‌ சிறந்தவரின்‌ மகள்‌ இவள்‌. ஆகவே, அவளை வெளியே துரத்த ஒருவரும் துணியவில்லை. விசாகை மாமனாரை நோக்கி, “ஏன்‌ மாமா, நான்‌ வீட்டை விட்டுப்‌ போக வேண்டும்‌! நான்‌ செய்த குற்றம்‌ என்ன?” என்று கேட்டாள்‌.

“போதும்‌, வாயை மூடு. பழைய சோறு சாப்பிடுகிறேன்‌ என்று சொல்லிப்‌ பிச்சைக்காரன்‌ எதிரில்‌ என்னை இழிவு படுத்தவில்லையா நீ? வீட்டை விட்டு வெளியே போ, வாயாடிப் பெண்……” என்று உறுமினார்‌.

“நான்‌ தங்களை இழிவு படுத்தவில்லை. உண்மையைத்தான் சொன்னேன்‌. இதை நாலு பேர்‌ தப்பு என்று சொன்னால்,‌ நான்‌ வெளியே போகிறேன்‌. யாரிடத்திலாவது சொல்லிப்‌ பாருங்கள்‌” என்றாள்‌ அப்பெண்‌.

மாமனாருக்குச்‌ சினம்‌ அடங்கவில்லை. ஆனாலும்‌, சற்று எண்ணினார்‌. இவள்‌ செல்வன்‌ வீட்டு மகள். வாளா விரட்டி அனுப்பி விட முடியாது. இவள்‌ குற்றத்தைப்‌ பலருக்கும்‌ தெரியும்படி கூறி, அவளை அப்புறப்படுத்த வேண்டும்‌ என்று முடிவு செய்தார்‌. ஆகவே, ஆட்களை அனுப்பி, ஐம்பெரும்‌ குழுவினரை அழைத்து வரும்படி கட்டளையிட்டார்‌.