உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

“விசாகையை இங்கு அனுப்பி வைக்கும் போது, தனஞ்சயச்‌ செல்வர்‌ சில அறிவுரைகளைக்‌ கூறினார்‌. அவற்றிற்குப்‌ பொருள்‌ விளங்கவில்லை. “வீட்டு நெருப்பை அயலாருக்குக்‌ கொடுக்காதே, அயலார்‌ நெருப்பை வீட்டில்‌ கொண்டு வராதே,” என்று கூறினார்‌. நெருப்பு இல்லாமல்‌ வாழ முடியுமா? அண்டை, அயலார்‌ நெருப்புக்‌ கேட்டால்,‌ கொடுக்காமல்‌ இல்லை என்று சொல்லலாமா? நம்‌ வீட்டில்‌ நெருப்பு இல்லையானால்‌, அயலாரிடம்‌ வாங்காமல்‌ இருக்க முடியுமா?[1] இதற்குப்‌ பொருள்‌ என்ன?” என்று கேட்டார்‌.

விசாகை இதற்கு விளக்கம்‌ கூறினாள்‌ :- “வீட்டு நெருப்பை அயலாருக்குக்‌ கொடுக்காதே” என்றால், நெருப்பைக்‌ கொடுக்காதே என்பது அன்று பொருள்‌. கணவன்‌, மாமன்‌, மாமி இவர்களிடத்தில்‌ ஏதேனும்‌ குற்றங்களைக்‌ கண்டால்‌, நீ போகிற வீடுகளில்‌, அந்தக்‌ குற்றங்களை மற்றவர்களிடம்‌ சொல்லாதே என்பது பொருள்‌. அயலார்‌ நெருப்பை வீட்டுக்குக்‌ கொண்டு வராதே என்றால்‌, கணவனைப் பற்றியாவது, மாமனார்‌, மாமியாரைப் பற்றியாவது ௮ண்டை, அயலில்‌ இருப்பவர்கள்‌ ஏதேனும்‌ அவதூறு சொன்னால்‌, அதைக் கேட்டுக் கொண்டு வந்து, ‘உங்களைப் பற்றி இன்னின்னார்‌ இப்படி, இப்படிச்‌ சொன்னார்கள்’; என்று வீட்டில்‌ சொல்லாதே என்பது பொருள்‌. இவ்வாறு பேசுவது, கலகத்துக்குக்‌ காரணம்‌ ஆகும்‌. ஆகையால்,‌ அது நெருப்பு என்று சொல்லப்படும்‌” என்றாள்‌. இதைக்‌ கேட்டு எல்லோரும்‌ மகிழ்ந்தார்கள்‌.


  1. * தீக்குச்சியும்‌, தீப்பெட்டியும்‌ இல்லாத காலம்‌ அது. அக்‌காலத்தில்,‌ அண்டை, அயலில்‌ உள்ளவர்‌, ஒருவர்க்கொருவர்‌ நெருப்பைக்‌ கொடுப்பதும்,‌ கொள்வதும்‌ வழக்கம்.