உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24

இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்

தூங்காதே; இவர்களுக்குச்‌ செய்ய வேண்டிய பணிவிடைகளைச்‌ செய்த பிறகு, மகிழ்ச்சியோடு தூங்கு என்பது கருத்து.

எரி ஓம்பு என்றால்‌, மாமன்‌, மாமி, கணவன்‌ இவர்களைத்‌ தீச்சடர் போலக்‌ கருதி நடந்து கொள்‌ என்பது.

குலதெய்வங்களை வழிபடு என்றால்‌, மாமன்‌, மாமி, கணவன்‌ இவர்களைக்‌ குடும்ப தெய்வம் போல எண்ணி, இவர்களைப்‌ போற்றி வழிபட வேண்டும்‌ என்பது.

இவற்றைக்‌ கேட்ட போது, மாமனாருக்கும்‌, மற்றவர்‌களுக்கும்‌ மன நிறைவும்‌, மகிழ்ச்சியும்‌ உண்டாயின. அவர்கள்‌ விசாகையின்‌ அறிவைப்‌ புகழ்ந்தார்கள்‌. மாமனார்‌, அன்று முதல்‌ விசாகையினிடத்தில் நன்‌மதிப்புக்‌ கொண்டார்‌.

விசாகை நெடுங்காலம்‌ பேரன்,‌ பேத்திகளையுடையவராய்ப்‌ பெருவாழ்வு வாழ்ந்தார்‌. இவர்‌ பெருமான்‌ புத்தரின்‌ முதன்மையான சீராவகத்‌ தொண்டராக இருந்து, புத்தருக்கும்‌, பெளத்த சங்கத்துக்கும்‌ அரிய, பெரிய தொண்டுகளைச்‌ செய்து வந்தார்‌. பெளத்த பிக்குகள்‌ தங்கி வசிப்பதற்கு விகாரைகளைக்‌ கட்டிக்‌ கொடுத்ததோடு, அவர்களுக்கு அவ்வப்போது தான, தருமங்களைச்‌ செய்து வந்தார்‌. தமது முதுமைக்‌ காலத்திலே, துறவு பூண்டு, பெளத்த பிக்குணியாக [1] இருந்து, பேர் பெற்ற தேரியாக விளங்கி, இறுதியில்‌ வீடு பேறடைந்தார்‌. பெளத்தர்களின்‌ ஏழு சிறந்த பெண்மணிகளில்‌ இவர்‌ ஒருவர்‌.


  1. *பிக்குணி - புத்த சமயத்‌ துறவி