26
இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்
அப்போதுந் திருந்தவில்லை. தனது தீயொழுக்கத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருந்தான். மூன்றாந் தடவையும், கேமன் சேவகரால் பிடிக்கப்பட்டான். அரசர் அவன் செயலைக் கண்டு மனம் வருந்தினார். அறிவுரைகளைக் கூறி, அவனை மீண்டும் மன்னித்து விட்டார். ஆனால், கேமன் தனது தீயொழுக்கத்தைத் திருத்திக் கொள்ளவில்லை.
தன் மருகனுடைய தீயொழுக்கத்தையும், மூன்று முறை சேவகரிடம் அவன் அகப்பட்டுக் கொண்டதையும், அரசர் தம் பொருட்டு அவனை மூன்று தடவை மன்னித்து விட்டதையும், நகர மக்கள் அவனை இகழ்ந்து பேசுவதையும், அமைச்சர் அனாதபிண்டிகர் கேள்விப் பட்டார். பெரிதும் மனம் வருந்தினார். அவனுக்கு நல்லறிவு கொளுத்தி, நன்னெறியில் நிறுத்தக் கூடியவர் புத்தர் பெருமான் ஒருவரே என்பதை அறிந்து, கேமனைத் தம்முடன் அழைத்துக் கொண்டு, பெருமான் புத்தரிடம் சென்றார். சென்று அவரை வணங்கி, தாம் வந்த நோக்கத்தை அவருக்குத் தெரிவித்துக் கேமனுக்கு நல்லறிவு புகட்டியருள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். புத்தர் பெருமான், கேமனுக்கு நல்லறிவு கொளுத்தினார். அதன் சுருக்கம் இது :-
“பிறன்மனை நயக்கும் பேதை நான்கு தீமைகளைத் தேடிக் கொள்கிறான். முதலில், பாவம் அவனைச் சேர்கிறது. இரண்டாவது, அவன் கவலையின்றித் தூங்கும் நல்லுறக்கத்தை இழந்து விடுகிறான். மூன்றாவது, எல்லோராலும் நிந்திக்கப்பட்டுப் பழிக்கப்படுகிறான். நான்காவது, நிரயத்தையடைகிறான். ஆகையால், நல்லறிவுள்ள ஆண்மகன் பிறன் மனைவியை விரும்ப மாட்டான்.