உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளைஞர்க்கான புத்தமதக் கதைகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளைஞர்க்கான

புத்தமதக் கதைகள்

1. பிச்சைச் சோறு


சித்தார்த்த குமாரன் அரண்மனையை விட்டு வெளிவந்து துறவியாய் விட்டார். அரசபோகங்களும் இன்ப நலங்களும் அவருக்குப் பிறப்புரிமையாக இருந்தும், அவற்றை வேண்டாமென்று உதறித் தள்ளினார். தாய் தந்தை மனைவி மக்கள் அரசுரிமை யாவும் துறந்து வந்துவிட்டார். இன்ப நலங்களைக் குறைவு இல்லாமல் துய்த்து வந்த அவர், தமது இருபத்தொன்பதாவது அகவையிலே (வயதிலே), மனித வாழ்க்கையின் வளமைப் பருவத்திலே, இல்லற வாழ்க்கை யைப் புறக்கணித்துத் துறவு பூண்டார். ஆண்மையை விளக்கும் அழகிய மீசையையும் தாடியையும், தலைமுடியையும் சிரைத்து அரசர்க்குரிய ஆடையணிகளை நீக்கிக் - காவியுடை உடுத்துத் துறவுக்கோலம் பூண்டார். கால்நடையாகவே நெடுந்தூரம் நடந்து சென்றார். இராசகிருக நகரத்தையடைந்து நகரவாயிலைக் கடந்து நகருக்குள்ளே சென்றார்.

வீதிகளில் இருந்தமக்கள் இவருடைய உடல் தோற்றத்தையும் முகப்பொலிவையும் வியந்து இமை கொட்டாமல் இவரையே பார்த்தார்கள். இவர் மண்ணுலகத்தில் வாழும் மனிதன் தானோ என்று ஐயுற்றார்கள். கடைத்தெருவில் பொருள்களை வாங்குவோரும் விற்போரும், தொழிற்சாலைகளில் தொழில்