நச்சுப் பாம்பு
47
கருதினார்கள். பணப் பையையும், முத்து மாலைகளையும் எடுத்துக் கொண்டு குடியானவனையும் பிடித்துக் கொண்டு போனார்கள். போய், அரசன் முன்பு நிறுத்தினார்கள்.
அரசர் வழக்கை உசாவல் செய்தார். கிடைத்த சான்றுகளைக் கொண்டு, குடியானவன் கள்வனே என்று உறுதி செய்து, அக்காலத்து முறைப்படி களவுக் குற்றத்திற்குரிய கொலைத் தண்டனை கொடுத்தார். ஆகவே, சேவகர் குடியானவனைக் கொல்லக் கொலைக் களத்திற்குக் கொண்டு போனார்கள். போகும் வழியில், அவனை அடித்துக் கொண்டே போனார்கள். சேவகர் அடித்த போதெல்லாம், குடியானவன், அன்று காலையில் புத்தர்பெருமானும், ஆனந்த தேரரும் பேசிய மொழிகளைத் திரும்பத் திரும்பக் கூறினான். “இதோ பார். ஆனந்த! நச்சுப் பாம்பு.” “ஆமாம், பெருமானே! கொடிய நச்சுப் பாம்பு.” இந்த மொழிகளைத் தவிர, அவன் வேறொன்றையும் கூறவில்லை. இதைக் கேட்ட சேவகர் வியப்படைந்தனர். “புத்தர் பெருமான் பெயரையும், ஆனந்த தேரர் பெயரையும் அடிக்கடி நீ சொல்லுவதன் கருத்து என்ன?” என்று அவனைக் கேட்டார்கள். “இந்த இரகசியத்தை அரசரிடம் தவிர, வேறு ஒருவருக்கும் சொல்லக் கூடாது,” என்றான் குடியானவன்.
‘இதில் ஏதோ முதன்மையான செய்தி இருக்கிறது போலும்’ என்று சேவகர் எண்ணி, அவனை மறுபடியும் அரசர் முன்பு கொண்டு போய், நடந்த செய்தியைக் கூறினார்கள். அரசர், “நீ கூறியதன் கருத்து என்ன?” என்று அவனைக் கேட்டார்.