பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கழிவு மண்டலம்

நாம் உண்ணும் உணவு பிராணவாயுவோடு சேர்ந்து எரிந்து சக்தியாக மாற்றமடைகிறது. இவ்வுடல் சக்தி உருவாகக் காரணமாக அமையும் எரிபொருள் சக்தியே கலோரி ஆகும். நம் உடல் நன்கு செயல்பட ஒரு குறிப்பிட்ட அளவு கலோரி நமக்குத் தேவை. இத்தேவை நம் உடல் பருமன், நாம் செய்யும் வேலை இவற்றைப் பொறுத்து அமையும்.

நாம் உண்ணும் உணவுப் பொருட்கள் ஒவ்வொன்றிலும் அடங்கியுள்ள கலோரியின் அளவு வெவ்வேறு எண்ணிக்கையுடையனவாகும். நாம் உட்கொள்ளும் உணவு உடலுள் எரிந்து ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் கலோரியை வெளிப்படுத்தும். உதாரணமாக, ஒரு கிராம் புரோட்டின் உணவு நான்கு கலோரிகளை வெளிப்படுத்தும். அதே சமயத்தில் ஒரு கிராம் கொழுப்பு உணவு ஒன்பது கலோரிகளை வெளியாக்கும். கனலி எனும் கலோரி வெப்பம் வெளிப்பட ஆதாரமான எரிபொருட்களைப் பற்றி உடல் கவலைப்படுவதே இல்லை. எவ்வகை உணவுப் பொருளாயினும் அதிலிருந்து எரிசக்தியாக கலோரி வெளிப்பட்டு உடல் இயக்கம் செம்மையாக அமைய, ஆற்றல் ஊட்டுகிறது.

சாதாரணமாக நம் உடல் பருமன், நாம் மேற்கொள்ளும் பணி இவைகளுக்கேற்ப நமக்குக் கலோரிகள் தேவைப்படுகின்றன. சான்றாக 45 கிலோ எடையுள்ள ஒருவன் ஒய்வாக இருக்கும்போது அவனுக்கு ஒரு நாளைக்கு 1,680 கலோரி தேவைப்படுகிறது. அதே மனிதன் ஒரு சாதாரணமான வேலையைச் செய்வதென்றால் அவனுக்கு ஒரு நாளைக்கு 8,860 கலோரி தேவைப்படும். அதே மனிதன் மிகக் கடினமான வேலையைச் செய்ய நேர்ந்தால் அவனுக்கு ஒரு நாளைக்கு 6,720 கலோரி தேவைப்படும். இவ்வாறு செய்யும் வேலைக்கேற்ப கலோரி தரும் உணவு வகைகளை உட்கொள்வதன் மூலம் தான் அவர் உடலை நல்ல முறையில் பேணுதலாக வைத்துக் கொள்ளவும் ஆற்றலோடு உடலை இயங்கச் செய்யவும் முடியும்.

பெரியவர்களைவிட குழந்தைகளுக்கு அதிக அளவு கலோரி தேவைப்படும். காரணம், முதியவர்களைவிட சிறுவர்களுக்கு வேகமாக உண்ணும் உணவு எரிந்து வெப்ப சக்தியாக மாறுவதே யாகும்.

கோடைகாலத்தைவிட குளிர்காலத்தில் நாம் அதிக அளவு கலோரிகளைப் பயன்படுத்துகிறோம். சாதாரணமாக உடலின் முக்கிய எரி பொருட்களாக கார்போஹைட்ரேட், ஸ்டார்ச், சர்க்கரை ஆகியன அமையும். ஒரு வேளை, நம் உடலுக்குத் தேவைப்படும் அளவைவிட அதிக அளவு எரிபொருளை நம் உடல் பெற நேர்ந்தால், உடல் தன் தேவைக்கானது போக மீதமுள்ளவற்றை எதிர்காலத்திற்காக சேமித்து வைத்துக்கொள்ளும். இவ்வாறு ஒவ்வொரு நாளும் சேமிக்கும் எரிபொருள் மூன்றில் ஒரு பங்கு மட்டுமேயாகும். மீதமுள்ளவை கொழுப்பாக மாறிவிடும். எனவே, நாம் உட் கொள்ளும் உணவின் மூலம் பெறக்கூடிய கலோரிகளின் அளவை சரியாகக் கணக்கிட்டுக் கவனித்துக் கொண்டால் உடலில் தேவையற்ற கொழுப்பு தேங்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இதன் மூலம் கொழுப்புகளால் விளையும் தொல்லைகளோ உடல் உபாதைகளோ இல்லாமல் செம்மையாக உடலை வைத்துக்கொள்ள இயலும், இதற்காக இப்போதெல்லாம் உணவு விடுதிகளில் சில, தாங்கள் வழங்கும் உணவுப் பொருட்களில் அடங்கியுள்ள கலோரிகளின் எண்ணிக்கையையும் குறிப்பிட்டு உணவு அட்டவணையை அச்சடித்து வழங்குகின்றன.


கழிவு மண்டலம் : நம் உடலில் சேர்ந்து கொண்டிருக்கும் கழிவுப் பொருட்களை உடலின் மிக முக்கிய நான்கு உறுப்புகள் அவ்வப்போது அக்கழிவுகளை வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. இக்கழிவு உறுப்புக்கள் தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் ஆகும். இவை நான்கும் இணைந்ததே கழிவு மண்டலம்.

தோல் : நம் உடல் முழுமையும் தோலால் மூடப்பட்டுள்ளது. இவை வெயில், மழை, காற்றுப் போன்றவற்றிலிருந்து நம்மைக்காப்பதோடு வியர்வை போன்றவற்றை வெளியேற்றும் வடிகால்களாகவும் அமைந்துள்ளன.

தோலின் அடிப்பகுதியில் இருவகைச் சுரப்பிகள் உள்ளன. அவையே வியர்வைச் சுரப்பிகளும் எண்ணெய்ச் சுரப்பிகளுமாகும். இவற்றின் மொத்த எண்ணிக்கை இருபது இலட்சத்திற்கும் மேலாகும். இவை உடலெங்கும் தோலினடியில் அமைந்துள்ளன. அதிலும் இவற்றின் எண்ணிக்கை உள்ளங்கை, உள்ளங்கால், நெற்றி, அக்குள் ஆகிய பகுதிகளில் மிகுதியாகும். எனவேதான் இப்பகுதிகளில் எப்போதும் வியர்வை வெளியேற்றம் மிக அதிகமாகவே இருக்கிறது.