பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

146

கொழுப்பு

சாதாரணமாக ஆண் கொசுக்கள் மரச் சாற்றைவும் பழச்சாற்றையுமே உண்கின்றன. பெண் கொசுக்கள் மட்டுமே கடித்து இரத்தத்தை உறிஞ்சி வாழ்கின்றன. கொசுவின் தலைப்பகுதியில் அமைந்துள்ள ஊசிபோன்ற அமைப்பை நம் தோலினுள் செலுத்தி உமிழ் நீரைப்பாய்ச்சி நம் இரத்தத்தை உறிஞ்சி உண்கின்றன.

கொசு

நம்மைக் கடிக்கும்போது உமிழும் உமிழ் நீரில் உள்ள நோய்க்கு கிருமிகள் எளிதாக கடிவாய் வழியே உடலினுள் சென்று நோயைப் பரப்புகின்றன.

கொசுக்களை ஒழிக்க வீட்டைச் சுற்றிலும் நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசு வாழுமிடங்களில் கொசு மருந்து தெளிக்க வேண்டும். உறங்கும்போது கொசுவலை கட்டிக் கொள்ள வேண்டும்.


கொழுப்பு : பிராணிகள். தாவரங்கள் உட்பட உயிரினங்களில் பலவும் கொழுப்பைப் பெற்றுள்ளன. சிலவற்றின் கொழுப்பு திடப் பொருளாகவும் சிலவற்றின் கொழுப்பு திரவப் பொருளாகவும் அமைந்துள்ளன. பெரும்பாலும் பிராணியின் கொழுப்பு திடத்தன்மையுள்ளதாக இருக்கும். திரவ வடிவ கொழுப்புப் பொருள் எண்ணெயாக இருக்கும். ஆனால் எல்லா எண்ணெய்களும் கொழுப்புத் தன்மையுடையன அல்ல.

திட, திரவ வடிவ கொழுப்புகளுக்குச் சில பொதுத் தன்மைகள் உண்டு. அவை நீரில் கரையா. அவை நீரால் ஈரமாவதும் இல்லை. அதன் வழவழப்பான பரப்பில் நீர் படிவதில்லை. ஆனால், நீர் திவலைகளாக ஆங்காங்கே தேங்கி நிற்கும். கொழுப்பானது நீரைவிட கனம் குறைந்ததாகும். எனவேதான் கொழுப்பு நீரில் மிதக்கிறது.

வேதியியல் அடிப்படையில் கொழுப்பில் மூன்று மூலப் பொருட்கள் அடங்கியுள்ளன. அவையாவன: கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன் ஆகும். இவை கரிமக் கூட்டுப் பொருட்களாகும். பிரித்தால் அவை இரு கூட்டுப் பொருட்களாக அமையும். ஒன்று கிளிசரைன் எனும் நீர்க்கலவைப் பொருள், மற்றொன்று கொழுப்பு அமிலம் (Fatty Acid) எனும் கூட்டுப்பொருள். கொழுப்புகளும் எண்ணெய்களும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவையாக இருந்தபோதிலும் அவற்றில் பொதுவாக இருப்பது கொழுப்பு அமிலம் எனும் கூட்டுப் பொருள் ஆகும். நீரில் கரையாத கொழுப்பை பென்ஸைன் போன்ற திரவங்களால் கரைக்க முடியும். இத்தகைய திரவங்கள் எண்ணெய்ப்பசை, கறைகளைப் போக்குவதால் இவை “கறை போக்கிகள்“ என்றே அழைக்கப்படுகின்றன.

கொழுப்பு கலிக்கம் (Alkali) எனும் காரப் பொருளோடு சேர்த்துக் கொதிக்க வைக்கும் போது கிளிசரைன் எனும் நீர்க்கலவைப் பொருளாகவும் சோப்பாகவும் பிரிகிறது. சோப் கொழுப்பு அமிலத்தின் கார உப்பே தவிர வேறில்லை. இச்செய்முறை ‘சவுக்கார மாற்று' முறையாகும்.

நாம் உண்ணும் உணவில் முக்கியமாக இருக்க வேண்டிய மூன்று முக்கிய பொருட்கள் கார்போஹைட்ரேட் புரோட்டின், கொழுப்பு ஆகும். இவை மூன்றும் உடலுள் நன்கு எரிக்கப்பட்டு சக்தியாக மாற்றப்படுகிறது. இச்சக்தியில் ஒரு கிராம் கொழுப்புச் சக்தி இரண்டு கிராம் கார்போஹைட்ரேட், புரோட்டீன் சக்திகளுக்கு ஈடாகும்.

திரவ, திடக் கொழுப்புப் பொருட்களை நீண்டகாலம் காற்றில் இருக்கும்படி வைத்தால் அவை கெட்டுவிடும்.

நம் உடலில் சேரும் கொழுப்பைப்பற்றி இன்று பலரும் கவனம் செலுத்தி வருகிறார்கள். காரணம் உடலில் சேரும் அதிகக் கொழுப்பு பல்வேறு உடற் தீங்குகளுக்குக் காரணமாக இருப்பதால் கொழுப்பைப் பலரும் விரும்புவதில்லை.

கொழுப்பு நம் உடலுக்கு மிக இன்றியமையாத அத்தியாவசியப் பொருளாக இருந்தாலும் உடலின் சில பகுதிகளில் அதிக அளவு தேங்குவதால் பல தீய விளைவுகள் உண்டாகின்றன.