பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

பாரஃபின்

பிடித்த பின்னரே மின்சாரத்தின் பயன்பாடு மனிதகுல வாழ்வின் அனைத்து அங்கங்களிலும் பரவலாயிற்று.

இங்கிலாந்து நாட்டிலுள்ள நியூவிஸ்டன் எனுமிடத்தில் 1791ஆம் ஆண்டில் பாரடே பிறந்தார். ஏழைக் குடும்பத்தில் பிறந்ததனால் தாமாகவே கல்வி பயின்றார். தன் பதினான்காம் வயதில் புத்தகக் கடையொன்றில்

மைக்கேல் பாரடே

புத்தகக் கட்டுமானம் (பைண்டு) செய்பவராகவும் புத்தகம் விற்பவராகவும் பணியாற்றினார். அப்போது நிறைய அறிவியல் நூல்களை ஓய்வு நேரங்களில் படிக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இதனால் இவருக்கு அறிவியல் சிந்தனையும் ஆராய்ச்சியில் ஆர்வமும் உண்டாயிற்று.

இவர் தமது இருபதாவது வயதில் அப்போது புகழ்பெற்று விளங்கிய ஆங்கில அறிவியலாளர் சர். ஹம்ஃப்ரி டேவி என்பவரின் ஆராய்ச்சிச் சொற்பொழிவை ராயல் கழகத்தில் கேட்டார். இதன்பின் இவரது அறிவியல் பேரார்வம் பெருக்கெடுக்கத் தொடங்கியது. நமது அறிவியல் ஆர்வத்தை ஒரு கடிதம்மூலம் டேவிக்குத் தெரிவித்தார். இதன் விளைவாக பாரடேயை டேவி தம் ஆராய்ச்சிக்கூடத்தில் உதவியாளராக அமர்த்திக் கொண்டார். இவர் டேவிக்கு உதவுவதோடு, தனியாகவும் ஆராய்ச்சிகளைச் செய்து வந்தார். விரைவில் டேவியின் ஆய்வுத் துணைவரானார்.

பாரடே மின்சாரவியல் ஆராய்ச்சியில் பேரார்வம் கொண்டார். தனக்கு முன் மின்சாரவியலில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த ஆய்வுகளையெல்லாம் நன்கு அறிந்தார். மின்சாரத்தில் பயன்படுத்தி காந்தசக்தியை உருவாக்க முடியும் என்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. காந்தத்தைப் பயன்படுத்தி மின்சாரம் உண்டாக்க முனைந்தார். இதற்காக மின்னாக்கிச் சாதனம் ஒன்றை உருவாக்கினார். இந்தச் சாதனத்தில் ஒரு கம்பியின் வழியாக மின்னோட்டம் பாய்ந்து கொண்டிருக்கும் வகையிலும் ஒரு காந்தத்தின் அருகில் ஒரு கம்பி தொடர்ந்து சுழன்று கொண்டேயிருக்கும். இதுவே அக்கண்டுபிடிப்பு. பாரடே கண்டுபிடித்த இந்தச் சாதனம்தான் முதலாவது மின்சார மோட்டார் ஆகும். ஒரு பருப்பொருளை இயக்குவதற்கு ஒரு மின்னோட்டத்தைப் பயன்படுத்திய முதலாவது சாதனம் இதுவேயாகும். 'மின்காந்தத் தூண்டல்’ எனும் இக்கண்டு பிடிப்பை 1881ஆம் ஆண்டில் கண்டுபிடித்தார். இத்தூண்டலைக் கட்டுப்படுத்தும் விதிகள் 'பாரடே விதிகள்’ என அழைக்கப்படுகிறது. இக்கண்டுபிடிப்பை அடித்தளமாகக் கொண்டு பின்னர் உருவாக்கப்பட்டவைகளே இன்றுள்ள பல்வேறு வகையான மின்னாக்கிக் கருவிகள்.

இவர் மின் பகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுத்தளித்தார். குளோரின் வாயுவை மந்தப் பொருட்களுடன் கலக்கும்போது உருவாகும் புதிய கூட்டுப் பொருளைப்பற்றி ஆராய்ந்து பல புதிய உண்மைகளை வெளிப்படுத்தினார். வாயுக்களைத் திரவ நிலைக்குக் கொண்டுவருவதற்கான வழிமுறைகளைக் கண்டறிந்தார்.


பாரஃபின் : பெட்ரோலியத்தைக் காய்ச்சி வடிப்பதன் மூலம் இஃது பெறப்படுகிறது. இது ஒருவகை மெழுகு ஆகும். பொதுவாக பாரஃபின்கள் கார்பனும், ஹைட்ரஜனும் சேர்ந்த ஹைட்ரோ கார்பன்கள் என்னும் கரிமச் சேர்ம வகையைச் சார்ந்ததாகும். பொதுவாக வினை யற்ற தன்மையை கொண்டிருக்கும். எனவேதான் லத்தீன் மொழியில் பாரம் (Patum) எனில் சிறிது, அபின் (Affin) எனில் கவர்ச்சி என்ற சொற்களில் இருந்து அழைக்கலாயிற்று. கார்பனும் பிறிதொரு கார்பன் இணைந்து சங்கிலித் தொடராகவும், வளையச் சேர்மமாகவும் தருவதால் இருவகை பாரஃபின்கள் உண்டு. கார்பனின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க வாயு நிலைமையிலிருந்து படிப்படியாக நீர்ம, திரவ பாரஃபின்கள் உருவாகின்றன.