பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புற்றுநோய்

217

இந்த உறைக்குள்தான் புரோட்டோபிளாசம் எனும் உயிர்ப்பொருள் உள்ளது. இஃது இல்லாமல் எந்த உயிரணுவும் உயிர்வாழ முடியாது. கூழ் போன்ற இந்த உயிர்ப்பொருளுக்கு நிறமேதும் இல்லை. இது பிற உயிர்கள் போன்ற உணவை உட்கொள்கிறது. பிராண வாயுவைச் சுவாசிக்கிறது. இது தன் கழிவுப் பொருட்களையும் வெளியேற்றுகிறது.

புரோட்டோபிளாசம் இரு முக்கியப் பகுதிகளைக் கொண்டு அமைந்துள்ளது. இதன் மையப்பகுதியில் சற்றுக் கெட்டியாக அமைந்துள்ள உட்கரு ஒன்று உண்டு. இவ்வுட்கருவைச் சுற்றிலும் நீர்மப்பொருள் இருக்கிறது. அது 'சைட்டோப்பிளாசம்’ என அழைக்கப்படுகிறது. இவ்விரு பகுதிகளையும் தன்னுட்கொண்ட புரோட்டோபிளாசமாகிய உயிர்ப் பொருள், பல்வேறு வேதிப் பொருட்களைக் (Chemicals) கொண்ட கூட்டுக் கலவையாகும்.

ஒவ்வொரு உயிரினமும் அவற்றிற்கென ஒவ்வொரு வகைப் புரோட்டோபிளாசத்தைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு உயிரணுவும் தனக்குகந்த தனி வகையான புரோட்டோபிளாசத்தைப் பெற்றுள்ளன. எனவே, புரோட்டோ பிளாசம் ஒவ்வொன்றும் தன்னளவில் வேறுபட்டவையாகும். ஒவ்வொரு புரோட்டோ பிளாசமும் 99 சதவிகித அளவுக்கு நீர்,கார்பன், ஹைட்ரஜன் ஆக்சிஜன்,நைட்ரஜன் கலந்த புரதப் பொருட்களையும் மாவுப்பொருள் மற்றும் சர்க்கரை போன்ற கார்போ ஹைட்ரேட்களையும் கொண்டுள்ளன. கொழுப்புப் பொருட்களும் உப்பு வகைகளும் கூட புரோட்டோபிளாசத்தில் அடங்கியுள்ளன


ஃபுளோரின் : இஃது வாயு வடிவான மஞ்சள் நிறத் தனிமமாகும். துர்நாற்றமுடைய இத்தனிமத்தை 1886இல் கண்டறிந்தவர் ஃபிரெஞ்சு விஞ்ஞனியான ஹென்றி மாய்மான் என்பவராவார். உலக நிலப்பரப்பின் மேற்பகுதியில் 0.030 சதவிகிதம் இத் தனிமம் இருப்பதாகக் கணக்கிட்டுள்ளனர். மற்ற தனிமங்கள் பலவற்றுடன் இஃது வினை புரிவதால் தனியாகக் கிடைப்பது அரிதாக உள்ளது. ஃபுளோரினை அதிக அளவில் கொண்டுள்ள தாதுக்களில் கிரியோலைட், ஃபுளோரிநாப்டைட்டு, ஃபுளோர்ஸ்பார் ஆகியவை முக்கியமானதாகும். இவற்றிலிருந்து மின்பகுப்பு முறையில் ஃபுளோரினைப் பிரித் தெடுக்கிறார்கள்.

ஃபுளோரின் பல்வேறு வகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பிலும் சாயப்பொருட்கள், கரைப்பான்கள், உயவுப்பொருட்கள் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது. மயக்க மருந்துகள். பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பிலும் ஃபுளோரின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குடிதண்ணிரில் மிகச் சிறு அளவில் கலக்கப்படுவதுண்டு. ஃபுளோரின் பற்சிதைவைத் தடுக்கும் தன்மை கொண்டது. எனவே, பற்சிதைவைத் தடுக்கும் ஃபுளோரைடு பற்பசை தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

ஃபுளோரின் கூட்டுப் பொருட்கள் பல்வேறு வழிகளில் பயன்படுகின்றன. கண்ணாடியை அரிக்கும் தன்மை இதற்கு உண்டாதலின் இஃது பிளாஸ்டிக் அல்லது மெழுகு பூசப்பட்ட புட்டிகளிலேயே வைக்கிறார்கள், வெப்பத்தை அளக்கும் வெப்பமானிகளில் ஹைட்ரோ ஃபுளோரிக் அமிலம் பயன்படுத்தப் படுகிறது.

ஃபுளோரின் கூட்டுப் பொருளாகிய பிரயான் (Freon) என்பது குளிர்சாதனங்களில் பயன்படுத்தும் ஒரு முக்கிய பொருளாகும். டெஃப்லான் (Defion) என்பதும் ஃபுளோரின் உள்ள ஒரு பிளாஸ்டிக் ஆகும். இதன் மற்றொரு சேர்மம் DDFF என்பது மிகச்சிறந்த காளான் கொல்லி ஆகும்.பற்சிதைவிலிருந்து பற்களைக் காப்பாற்ற ஃபுளோரின் கல்ந்த பற்பசை பயன் படுத்தப்படுகிறது.


புற்றுநோய் : நம் உடலில் உள்ள திசுக்கள் அனைத்தும் உயிரணுக்களால் ஆனவைகளேயாகும். ஒவ்வொரு உயிரணுவும் இரண்டாகப் பிரிந்து பல்கிப் பெருகும் இயல்புடையதாகும். இவ்வாறு உயிரணுக்கள் பல்கிப் பெருகுவது உடலெங்கும் இடையறாது நடைபெறுகிறது. இதன் மூலம் அவ்வப்போது இறப்பெய்தும் உயிரணுக்களின் எண்ணிக்கை ஈடு செய்யப்படுக்றது.

சிலருடைய உடலில், சிலசமயம் உயிரணுக்கள் கட்டுப்பாடின்றிப் பல்கிப் பெருகுவதுண்டு. அவற்றில் தசை அல்லது எலும்பு உண்டாவதில்லை. அவை மற்ற உயிரணுக்களை நெருங்கியும் அவற்றிற்குண்டான உணவுப் பொருட்களை அபகரித்தும் மேலும் பெருக்கமடைந்து ஒரு கட்டிபோல் உருவாகும். இது கழலை எனப்படும். இக்கழலைகள் எல்லாமே உடலுக்குத் தீங்கிழைப்பதில்லை. சிலவகைக் கழலைகள் உடலுக்குத் தீங்கு செய்கின்றன