பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருத்துவம்

233

ஆகியன முக்கிய மயக்க (குளோரோபாரம்) மருந்துகளாகும்.

குளோரபாரம் மருந்தை சர். ஜேம்ஸ் சிம்ப்சன் என்ற ஆங்கிலேயர் 1847ஆம் ஆண்டில் கண்டுபிடித்தபோதிலும் அதைப் பயன்படுத்த மக்களிடையே பெரும் எதிர்ப்பு இருந்து வந்தது. ஒரு சமயம் விக்டோரியா மகராணிக்கு மயக்க மருந்து தந்து சிகிச்சை செய்ய வேண்டிய அவசர அவசியத் தேவை ஏற்பட்டது. அதன் விளைவாக 1858இல் அவருக்குக் குளோரபாரம் கொடுத்தனர். எவ்விதத் தீங்குமின்றி மருத்துவம் வெற்றியளித்தது. அதன் பிறகே மற்றவர்களும் அம்மயக்க மருந்தைத் தயக்கமின்றிப் பயன்படுத்தலாயினர்.

மயக்க மருந்து கண்டுபிடிப்புக்கு பிறகே மருத்துவத் துறையில் மாபெரும் திருப்புமுனை ஏற்பட்டதென்றே கூற வேண்டும்.


மயிர் (Hair) : மனிதர்களுக்கு அழகூட்டுவனவுள் தலை மயிரும் ஒன்றாகும். அம்மயிர் மரபுரிமையாக வரும் ஒன்றாகும். ஆயினும் அவற்றில் பல வகைகள் உண்டு. சில சுருள் முடியாக இருக்கும். சில நீளமாகவும் சில குட்டையாகவும் இருக்கும். சில செம்பட்டை வண்ணத்தோடும் சில கருநிறமாகவும் இருக்கும். இவ்வாறு வடிவிலும் வண்ணத்திலும் வேறுபட்டிருக்கும் மயிரின் தன்மையைக் கொண்டு, அம்மயிரையுடையவர் எந்த இனத்தைச் சேர்ந்தவர் என்பதைக் கண்டுகொள்ளலாம். மயிரை 'இன முத்திரை’ என்று கூறுவர்.

மயிரின் அமைப்பை வைத்து அதனை மூன்று முக்கியப் பிரிவுகளாகப் பிரிப்பர். முதல் பிரிவு குட்டையாகவும் சற்று மொறு மொறுப்பாகவும் இருக்கும். இதன் வண்ணம் கறுப்பாகவும் மயிரின் வெட்டுத் தோற்றம் நீள் வட்டமாக (Elliptic) இருக்கும். இம் மயிரையுடையவர்கள் ஆஃப்ரிக்க கறுப்பர் இனமக்களாவர்.

இரண்டாவது வகை நேரானதாகவும், நீளமானதாகவும் மெலிந்ததாகவும் அதே சமயம் கரடுமுரடானதாகவும் இருக்கும், இம் மயிரின் வெட்டுத் தோற்றம் வட்டமாக இருக்கும். இதன் வண்ணம் கருப்பாகும். இம் மயிரையுடைய மக்கள் சீன, மங்கோலிய, அமெரிக்கச் செவ்விந்திய இனங்களைச் சார்ந்தவர்களாவர்.

மூன்றாவது வகை அலை அலையாகவும் சுருண்டதாகவும் பட்டுப்போல் மெதுவானதாகவும் இருக்கும். இம்மயிரின் வெட்டுத் தோற்றம் முட்டை வடிவின (Oval) வாகும். இஃது ஐரோப்பிய இன மக்களுக்குரியதாகும். இம் மயிர் பார்ப்பதற்கு அழகாகவும் கருப்பு, பழுப்பு, சிவப்பு எனப் பல வண்ணங்களை யுடையதாகும்.

நான்காவது மயிர் வகையும் கூட உண்டு. ஒருவகை சுருட்டை முடியாகும். இத்தகைய முடி ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களுக்கு உண்டு.


மருத்துவம் : மனிதன் என்றைக்கு நோய் வாய்ப்பட்டு, அதனின்றும் குணமாக விழைந்தானோ அன்று முதல் மருத்துவம் முகிழ்த்து விட்டதெனலாம். நோய்க்கான காரணங்களையும் அதைக் குணப்படுத்துவதற்கான வழி முறைகளையும் நோய் வராமல் தடுப்பதற்கான தடுப்பு முயற்சிகளை முறைப்படுத்தியபோதே மருத்துவ இயலும் முழுமை பெற்றதாக உருவெடுத்ததெனலாம்.

பழங்காலத்தில் சீனர்களும், சுமேரியர்களும் பாபிலோனியர்களும் இந்தியர்களும் சிறந்த மருத்துவ முறைகளை அறிந்திருந்தனர். பல ஆண்டுகட்கு முன்னரே இந்தியர்கள் மருத்துவ நுட்பங்களை நன்கறிந்து அவற்றைக் குறித்து வைத்துள்ளனர். மருந்துண்ணும் மருத்துவ முறை மட்டுமின்றி அறுவை மருத்துவத்திலும் சிறந்து விளங்கியுள்ளனர். கத்திரி, ஊசி, ஒரு வகைக் குறடுபோன்றவற்றைக் கொண்டு அறுவை மருத்துவம் செய்து வந்ததாகத் தெரிகிறது.

இன்றுள்ள நவீன மருத்துவத்துக்கான அடிப்படை சுமார் மூவாயிரம் ஆண்டுகட்கு முன்னரே போடப்பட்டதாக வரலாறு கூறுகிறது. ஹிப்பாகிரட்டீஸ் எனும் கிரேக்கரே இன்றைய மருத்துவத் துறையின் தந்தையாகப் போற்றப்படுகிறார். நோய்க்கான காரணங்களைக் கண்டறிந்து நோய்களை வகைப்படுத்தும் முறையை அறிமுகப்படுத்தினார். அவருக்குப் பின் வந்தவர்கள் உடல் உறுப்புகளின் அமைப்பையும் அவை இயங்கும் தன்மையையும் அறிந்து அதற்கே மருத்துவம் செய்யலாயினர். உடலில் இடையறாது ஓடும் இரத்தவோட்ட முறையை வில்லியம் ஹார்வி என்பவர் பதினேழாம் நூற்றாண்டில் கண்டறிந்த பின்னர் மருத்துவ இயல் வளர்ச்சி வேகமும் விறுவிறுப்பும் பெற்றது. பின்னர் நுண்பெருக்காடி கண்டறியப்பட்டது. அதன்