பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுகுண்டு

19

இடத்தில் காமிகரி என்ற பெயரில் ஒரு ஆராய்ச்சி அணு உலை உள்ளது.

தாராப்பூர் அணுமின் வெளிப்புறத் தோற்றம்

அணு மின் உற்பத்திக்கென தமிழ்நாட்டில் கல்பாக்கத்திலும் மகாராஷ்டிர மாநிலத்திலும் குஜராத் மாநில எல்லையோரமாக தாராபூர் என்ற இடத்திலும் இராஜஸ்தானிலும் உள்ளன. தமிழ் நாட்டில் கூடங்குளம் எனுமிடத்தில் புதிய அணுமின் உலை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அணு உலைகளில் பணியாற்றுவோர் அணுக்கதிர் வீச்சுக்கு ஆளாக நேரிடும். இதற்காகத் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் அணு உலைகளில் செய்யப்பட்டுள்ளன.

அணு குண்டு : ஒரு தனிமத்தின் அணுக் கருவைப் பிளக்கும்போது பேராற்றல் வெளிப்படுகிறது. இதுவே 'அணுக்கரு ஆற்றல்’ எனக் கூறப்படுகிறது.

அணு உலையில் 'அணுக்கருப் பிளப்பு’ கட்டுப்பாட்டுடன் படிப்படியாக நிகழ்த்தப்படுகிறது. ஆனால் அணுகுண்டில் அணுக் கருப்பிளப்பு எவ்விதக் கட்டுப்பாடும் இல்லாது

ஒரேயடியாக நிகழ்கிறது. இவ்வாறு ஒரே மூச்சில் வெளிப்படும் அளப்பரிய ஆற்றல் ஒரு சில விநாடிகளில் விரைந்து பரவுகிறது. இதுவே, ‘அணு வெடிப்பு’ என்பதாகும்.

இவ்வாறு வெடித்து வெளிக்கிளம்பும் அணுக்கரு ஆற்றல் கடும் வெப்பத்தை வெளிப்படுத்துகிறது. இதன் மூலம் எங்கும் பரவியுள்ள காற்று அளவிலா வெப்பத்தை அடைகிறது. தகிக்கும் வெப்பக் காற்றுப் படலம் தீக்கோளம் போல் தோற்றமளிக்கும். தீப்பிழம்பாக, புகை மண்டலமாக மேலெழுந்து பரவும். அப்போது எழும்பும் தூசுகளையும் புகைப்படலங்களையும் உடன் இழுத்து உயரச் செல்லும். அணு குண்டு வெடிக்கும் போது வெளிப்படும் கதிரியக்கத்தால் காற்றின் மூலக்கூறுகள் ஊதா நிறத்தைப் பெறும். மேல்நோக்கி எழும் தீக் கோளம் பக்கவாட்டில் விரிந்து பரவும். இஃது பார்ப்பதற்கு நாய்க்குடை போல் தோற்றம் தரும்.