பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

306

ஜென்னர்

மாக எடுத்துப் பயின்று பட்டதாரியானார். மருத்துவக் கல்விக்கென லண்டன் சென்ற இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானம் பயின்றார். பின் லண்டன் பல்கலைக் கழகத்தில் பயின்று டாக்டர் பட்டம் பெற்றார்.

தம் இருபத்தைந்தாம் வயதில் 1885இல் இந்தியா திரும்பினார். பின்பு கல்கத்தாவிலுள்ள மாநிலக் கல்லூரியில் ஆசிரியராக அமர்ந்தார். இயற்பியல் கற்பிக்கும் ஆசிரியராகப் பணியாற்றி வந்த போதிலும் உயிரியல் ஆய்விலேயே இவருக்கு நாட்டம்மிகுந்து வந்தது. இதற்கான ஆய்வுக்கூடமொன்றை பெரும் இடர்ப்பாட்டிற்கிடையே உருவாக்கி அங்கு தம் விஞ்ஞான ஆய்வுகளை முனைப்புடன் செய்து வந்தார். இவர் தம் ஆசிரியப் பணியினின்றும் ஓய்வு பெற்ற பிறகு தம் ஆய்வுக் கூடத்தை மேலும் விரிவுபடுத்தி விரிவான விஞ்ஞான ஆய்வுக்கு முயற்சி மேற்கொண்டார். அரசாங்கமும் இவரது முயற்சிக்குத் துணை நின்றது. அரசின் நிதியுதவியோடும் ஒத்துழைப்போடும் 'போஸ் ஆராய்சிக் கழகம்'எனும் அமைப்பை 1917ஆம் ஆண்டு நவம்பரில் உருவாக்கினார். அது வரை அவர் ஆற்றியுள்ள அறிவியல் ஆய்வுப் பணிக்கென ஆங்கில அரசு அதே ஆண்டில் ‘சர்’ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது.

இவரது முனைப்பான உயிரியல் ஆராய்ச்சியின் விளைவாக மனிதர்களைப் போன்றே தாவரங்களுக்கும் உணர்ச்சியும் உயிரும் உண்டு என்பதை நிலை நாட்டினார். நாம் நச்சுப் பொருட்களை உண்டால் என்ன வேதனைகளை அடைவோமோ அதே போன்று தாவரங்களும் நச்சுப் பொருட்களால் துன்புறுகின்றன என ஆய்ந்து கூறினார். மரங்களை ஓரிடத்திலிருந்து அப்படியே பெயர்த்து வேரிடத்தில் வைக்கும் புதிய முறையைக் கண்டு பிடித்தவரும் இவரே. தாவரங்களின் வளர்ச்சியை துல்லியமாய் கணக்கிடுவதுடன் ஒரு கோடி மடங்கு பெரிதுப்படுத்தும் புதிய கருவியைக் கண்டுபிடித்தவரும் இவரேயாவார்.

இவருக்கு 1917ஆம் ஆண்டில் இங்கிலாந்து மன்னர் 'நைட்' (Knight) பட்டமளித்தார். 1920இல் இவரது ஆராய்ச்சிப் பணியைப் பாராட்டிய ராயல் சொசைட்டியினர் 1920ஆம் ஆண்டில் இவரைத் தன் உறுப்பினராக (F. R. S) ஏற்றுச் சிறப்பித்தனர்.

இவர்தம் ஆய்வுகளையும் உயிரியல் பற்றிய கருத்துக்களையும் நூல் வடிவில் வெளியிட்டுள்ளார். இவர் தமது 79ஆம் வயதில் 1937இல் தன் பிறந்த நாளைக்கு ஒரு வாரம் முன்னதாக மறைவெய்தினார்.


ஜீன் : ஜீன் எனும் சொல்லுக்குத் தமிழில் 'மரபணு’ என்பது பொருளாகும். பரம்பரை பரம்பரையாகத் தொடர்ந்து வரும் சில குணாதிசயங்களைக் கட்டுப்படுத்தும் மரபுக்கூறு உயிரணுவாகும். இம்மரபணுக்களால் தான் பாட்டன் வழி தந்தையும் தந்தை வழி மகனும் தலைமுறை தலைமுறையாகச் சில குறை நிறை பண்புகளைத் தொடர்ந்து பெற முடிகின்றது.

இம் மரபணுவானது உயிரணுக்களின் உட்கருவில் 'குரோமோசோம்கள்' என்ற நிறக் கோலுண்டு. அதில் இவை மணி கோத்தாற் போன்று நீளமாக அமைந்திருக்கும் ஜீன்கள். மனிதர்கட்கு மட்டுமல்ல, விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றிலும் உண்டு. ஒரு தாவரச் செடியோ அல்லது விலங்கு ஈன்ற குட்டியோ, அல்லது மனிதக் குழந்தையோ பிறந்தவுடன் பெற்றோரை முற்றிலுமாகப் பிரதிபலிப்பதில்லை. வளர வளர தன் பெற்றோர்களின் அல்லது முந்தையோரின் குணப்பண்புகளை-வடிவத்தைப் பிரதிபலிக்கும். இவ்வாறு பாரம்பரியத்தை மீண்டும் வெளிப்படுத்த பண்புக் காரணியாக அமைவது இந்த ஜீன்களேயாகும்.


ஜென்னர் : இவரது முழுப் பெயர் எட்வர்ட் ஜென்னர். இவர் பெரியம்மை எனும் கொடிய தொற்றுநோய் வராமல் தடுக்க மருந்தையும் அதை ஊசி மூலம் உடலில் செலுத்தும் முறையையும் கண்டறிந்தவராவார்.

ஆங்கிலேயரான ஜென்னர் இங்கிலாந்தில் உள்ள கிளஸ்ட்டர்டியரிலுள்ள பர்க்கவே எனும் சிற்றூரில் 1749ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தம் பள்ளிக் கல்வி முடிந்ததும் மருத்துவப் படிப்பைத் தொடர்த்தார். பாதிரியராக இருந்த இவர் தந்தை அதற்குப் பெரும் தூண்டுகோலாக இருந்தார்.

மருத்துவப் பட்டம் பெற்ற ஜென்னர் முதலில் லண்டனில் லட்லோ எனும் மருத்துவ அறிஞரிடம் சேர்ந்து மருத்துவப் பணியாற்றினார். பின்னர், அக்காலத்தில் லண்டனிலேயே புகழ்பெற்ற மருத்துவ வல்லுநராகத் திகழ்ந்த ஜான் ஹன்டரிடம் சேர்ந்து அறுவை மருத்துவத்தில் சிறப்புப் பயிற்சி பெற்றார்.