பக்கம்:இளையர் அறிவியல் களஞ்சியம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உயர்த்தி

79

வேதியியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்தப்படுகின்றன.

உப்பு சாதாரணமாக நிலத்திலும் கடல் நீரிலிருந்தும் தயாரிக்கப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். நீர் வெயிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இவ்வுப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் 'உப்பளம்' என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. இத்தகைய உப்பளங்கள் கடற்கரையை ஒட்டிய கடற் கழிகளை அடுத்து அமைந்திருக்கும். தமிழ்நாட்டில் தூத்துக்குடிப் பகுதியிலும் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்களில் தரமான உப்பு மிகுதியாகத் தயாரிக்கப்படுகிறது. வடஇந்தியாவில் பல பகுதிகளிலும் உலகின் வேறுபல இடங்களிலும் தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியைடுத்துச் சேகரிக்கிறார்கள். அமெரிக்காவிலும், ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற வேறு சில இடங்களிலும் உப்பு நீர்க் கிணறுகளைத் தோண்டி உப்பு தயாரிக்கிறார்கள். சில உப்பு நீர் ஏரிகளிலிருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள சாம்பர் ஏரியும் பாலஸ்தீனத்திலுள்ள சாக்கடல் ஏரியும் உப்பு நீர் ஏரிகளாகும். சாக்கடல் ஏரியிலிருந்து மட்டும் 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் எனக் கணக்கிட்டுள்ளார்கள். சூரிய வெப்பம் அதிகம் இல்லாத நாடுகளில் உப்பு நீரைக் காய்ச்சி உப்புத் தயாரிக்கிறார்கள். கடல் நீரைக் கொண்டு தயாரிக்கும் உப்பை மேலும் சுத்தப்படுத்தி 'மேசை உப்பு' (Table Salt) ஆக பொடித்துப் பயன்படுத்துகிறார்கள்.

உப்பு உணவுக்காக மட்டும் பயன்படுத்தப்படுவதில்லை. இறந்த மீன்களை கருவாடாகப் பதப்படுத்த, பிராணிகளின் தோல்கள் கெடாமல் பதனிட உப்புப் பயன்படுத்தப்படுகிறது. பனிக்கட்டியுடன் உப்பைக் கலந்தால் மேலும் பனிக்கட்டி குளிர்ச்சி அடையும். எனவே குளிர் எந்திரங்களில் உப்புப் பயன்படுத்தப்படுகிறது. ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க உப்பு உபயோகப்படுத்தப்படுகிறது. வேதியியற் பொருள்கள் தயாரிக்கவும் மருந்துகள் செய்யவும் உப்பு தேவைப்படுகிறது. நமக்குச் சாதாரணமாக உண்டாகும் பல்வலி, தொண்டை வலி நீங்க உப்பு நீரால் வாய்க்கொப்பளித்தால் போதும், வலி நீங்கும். வயல்களில் வளரும் பயிர்கட்குத் தேவையான இரசாயன உரத் தயாரிப்பிற்கும் உப்பு தேவைப்படுகிறது.

உப்புக்கள் பொதுவாக அமிலமும் காரமும் ஒன்றுக்கொன்று நடுநிலையாக்கல் வினைக்கு உட்பட்டு பெறப்படுகிறது. இந்த வினையின் நிகழ்வுத் தன்மையைப் பொறுத்து அமில உப்பு, கார உப்பு, இரட்டை உப்பு, மற்றும் அணைவு உப்பு ஆகியவைகள் கிடைக்கப் பெறுகின்றன.

உயர்த்தி : ஆங்கிலத்தில் லிஃப்ட் (Lift) 'எலிவேட்டர்' (Elavator) என்றெல்லாம் அழைக்கப்படும் பாரந்தூக்கி அமைப்பே 'உயர்த்தி’ எனத் தமிழில் அழைக்கப்படுகிறது.

உயரமாக அமைந்துள்ள பல மாடிக் கட்டிடங்களுக்கு படிகளில் ஏறிச் செல்வதென்றால் மிகவும் கஷ்டமாக இருக்கும். இதனால் மிகுதியான களைப்பு ஏற்படுவதோடு ஏறி இறங்க அதிக நேரமும் பிடிக்கும். இவ்விரண்டையும் தவிர்க்கப் பயன்படும் நவீன சாதனமே உயர்த்தியாகும். இதன்மூலம் பல அடுக்குக் கட்டிடங்களின் மாடிகளுக்குப் பொருள்களை கொண்டு செல்லவோ மனிதர்கள் ஏறி இறங்கவோ எளிதாக அமைகிறது.

இத்தகைய அமைப்பிலான சாதனத்தைப் பன்னெடுங்காலத்திற்கு முன்னரே ரோமானியர்கள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இவ்வுயர்த்திகளை ஏற்றவும் இறக்கவும் அடிமை களைப் பயன்படுத்தினார்கள். அதன்பின் 17ஆம் நூற்றாண்டில் வேலயர் என்ற ஃபிரெஞ்சு நாட்டுக்காரர் 'பறக்கும் நாற்காலி' ஒன்றை அமைத்தார். இதன்மூலம் பிரயாணிகள் உயரமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதை இயக்க பணியாட்களையும் அடிமைகளையும் சில சமயம் விலங்குகளைக் கொண்டும் இழுக்கச் செய்தார்கள். அதன்பின் நீராற்றலால் இயங்கும் உயர்த்திகள் (Hydraulic elevators) உருவாக்கபட்டுப் பயன்படுத்தப்பட்டன. இவை ஒரு நிமிடத் திற்கு 100 அடி முதல் 200 அடிவரை உயர்த்தப்பட்டது.

இன்றைய வடிவிலான உயர்த்தியை 1880 -இல் வெர்னர் சீமன்ஸ் என்பவர் ஜெர்மனியில் உருவாக்கினார். அதன் பின் சில திருத்தங்களுடன் வில்லியம் பாக்ஸ்டர் என்பவர் அமெரிக்