பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

102

காரியமாற்ற அவ்வச் சமயத்தினர் முழு உரிமை பெற்றிருந்தனர் என்பதை மேற்கண்ட சம்பவங்கள் தெளிவாக உணர்த்திக் கொண்டுள்ளன.

இஸ்லாத்தின் உட்கிடக்கையை உணர்த்திய சட்டம்

மாற்றுச் சமயங்களை எல்லா வகையிலும் மதிக்கப் பணித்தல், சமயச் சகிப்புத்தன்மை, முழுமையான மதச் சுதந்திரம் ஆகிய சிறப்பம்சங்கள் வாயிலாக பிற சமயங்களை சகோதரச் சமயங்களாக மதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தின் உண்மை நிலையை உட்கிடக்கையை உரத்த குரலில் பறைசாற்றுவதாயமைந்திருந்தது.

சமய ஆதிக்கமின்றி
அனைவருக்கும் சம உரிமை

மதீனா நகர் அரசமைப்புச் சட்டத்தின் மற்றொரு சிறப்பம்சம் நபிகள் நாயகம் (சல்) அவர்கள் ஒரு முஸ்லிமாக, மார்க்கத்தின் ஈடு இணையற்ற தலைவராக இருந்தும் அவரது வழிகாட்டுதலில் உருவாக்கப்பட்ட சட்டத்தில் முஸ்லிம்களுக்கென தனி உரிமைகளோ அன்றி சிறப்புரிமைகளோ எதுவும் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும். கடுகளவும் பாரபட்சமின்றி அனைத்துச் சமயத்தவர்களுக்கும் சம உரிமை வழங்கப் பட்டிருந்தது.

மதீனாவின் சாதாரண குடிமகன் வெளியூரைச் சேர்ந்த தன் இனத்தவர் யாருக்கும் அடைக்கலம் அளிக்கலாம். அந்த உரிமை அவருக்கு முழுக்க உண்டு. அவ்வாறு அடைக்கலம் அளிக்கப்பட்டவருக்கு, தான் விரும்பினால் மதீனா நகரில் மற்றவர்களைப் போல வாழ குடியுரிமையும் வழங்கலாம். இதேபோல வெளியூர்க்காரருக்குக் குடியுரிமை வழங்கும் தகுதிப்பாடும் உரிமையும் யூத,