பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

அடிப்படையிலான சமயச் சட்ட விதிகளின் அடிப்படையில் தீர்வுகாண முழு அளவில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உரிய தீர்வு கிடைக்காதவர்கள் இஸ்லாமிய நீதி மன்றத்தை அணுகக் கட்டாயப்படுத்தப் படவில்லை என்பது கவனிக்கத்தக்கதாகும்.

அவரவர் மதச் சட்ட அடிப்படையில் தீர்வு

இதே முறையைத்தான் இந்தியாவை அறுநூறு ஆண்டுகளுக்குமேல் அரசாண்ட முஸ்லிம் மன்னர்கள், மத அடிப்படையில் எழுந்த எந்தப் பிரச்சினையானாலும் அவற்றை அந்தந்த மதப் பெரியவர்கள்-நீதிபதிகளைக் கொண்டு, அந்தந்த வேதங்களின் அடிப்படையில் தீர்ப்புச் சொல்லித் தீர்வு கண்டு வந்தார்கள் என்பது வரலாறு. ஏனெனில், எந்தச் சமய மக்கள் மீதும் இஸ்லாம் எவ்வித ஆதிக்கத்தையும் செலுத்த அனுமதியில்லை என்பதுதான் உண்மையாகும். இந்த நிலை இந்த இருபதாம் நூற்றாண்டில் இறுதிப் பகுதியில்கூட செயல்வடிவு பெறவில்லை என்பது எல்லா வகையிலும் வருந்துதற்குரிய தொன்றாகும்.

வணக்கத் தலங்களைக் காப்பதில்
அனைத்துச் சமயத்தவர்க்கும் சமபங்கு

மதீன நகர அரசமைப்புச் சட்டப்படி அவ்வச் சமய சார்புள்ளவர்கள் தங்களது வணக்கத் தளங்களையும் சமயப் புனிதவிடங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஒரு சமயத்தவர் மற்ற சமயத்தவர்களின் வணக்கத்தலங்களையும் புனித இடங்களையும் கண்ணியப்படுத்த வேண்டும். பழிக்கவோ இழிவாகப் பேசவோ அறவே கூடாது. இயன்ற வரை மாற்றார் வழிபாட்டுத் தலங்களையும் புனித இடங்களையும் காப்பதில் அனைத்துச் சமயத்தவர்கட்கும் பொறுப்பு உண்டு என்பதையும் அச்சட்டம் வலியுறுத்தத் தவறவில்லை.