பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

120

ஈடுபடவில்லை. சிலை வணக்கத்தார் எப்போதாவது தாங்களாக உணர்ந்து, தெளிந்து, மனம் மாறி சிலை வணக்க முறையைக் கைவிடும் வரை இஸ்லாம் பொறுமையாக இருப்பதோடு அவர்களின் சிலை வணக்க வழிபாட்டு முறையை எதிர்த்து, அவர்கள் நம்பிக்கையை ஊறுபடுத்தும் முறையில் தீங்காகப் பேசவும் மாட்டார்கள் என்ற திருமறை வழிமுறையைக் கடைப்பிடித்ததன் மூலம் அம்மடாலயம் அழிவினின்றும் முழுமையாகக் காப்பாற்றப்பட்டது.

முஸ்லிம்களின் பெருத்தன்மையான போக்கும் மாற்றுச் சமயத்தவரை மதிக்கும் தகைமையும் அம்மடாலயத் துறவிகளின் மனதில் மாபெரும் மதிப்பை ஏற்படுத்தியது. தங்களின் நன்றியுணர்வை வெளிப்படுத்தக் கருதிய மடாலயக் கிருத்துவத் துறவிகள் தங்கள் மடாலய வளாகத்திலேயே ஒரு மசூதி கட்டிக்கொள்ள அனுமதித்தார்கள் என்றால் பிற சமயத்தவர்களை முஸ்லிம்கள் எந்த அளவுக்கு மதித்து நடந்தார்கள் என்பதற்கு இச்சம்பவம் இணையற்ற எடுத்துக்காட்டாக வரலாற்றில் மணம் பரப்பிக் கொண்டுள்ளது.

முஸ்லிம்களுக்கு என்ன தீர்வோ
அதுவே மாற்றுச் சமயத்தவர்கட்கும்

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் மறைவெய்திய பின், அபூபக்ர் (ரலி) அவர்கள் கலீஃபாவாகத் தலைமைப் பொறுப்பேற்றார்கள். சின்னாட்களுக்குப் பின் நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து ஆளுநர் ஒருவர் கலீஃபாவுக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் வேற்றுச் சமயத்தைச் சார்ந்த சில வெளிநாட்டு வணிகர்கள் வியாபாரத்தின் பொருட்டு நம் நாட்டிற்குள் வணிகம் செய்ய வர விரும்புகிறார்கள். அவர்களிடமிருந்து எவ்வகையில் ’சுங்கத் தீர்வை’ வசூலிப்பது என்பதற்கு வழி கூறுமாறு வேண்டியிருந்தார். அதற்கு, “அவர்கள் நாட்டிற்குள் நுழையும் முஸ்லிம்