பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

133

மன்னர்கள் அனைவரும் இந்தியாவிலேயே பிறந்து வளர்ந்து அரசுரிமை பெற்றவர்கள்.

இதே போன்று மாமன்னர் பாபர் இந்தியாவைக் கைப்பற்றியவுடன் தன் இருப்பிடத்தை காபூலிலிருந்து டில்லிக்கு மாற்றிக் கொண்டார். அவருக்குப் பின் அரியணையேறிய மொகலாய மன்னர்கள் அனைவரும் இந்திய மண்ணில் பிறந்து வளர்ந்த இந்திய மன்னர்களாகவே விளங்கினர். இந்தியாவுக்கு வெளியே அவர்கட்கு எந்தத் தொடர்பும் இருந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையான ஹஜ் கடமையை அரபு நாட்டிலுள்ள மக்கா நகர் சென்று நிறைவேற்ற வேண்டும். வெளிநாடு சென்று நிறைவேற்ற வேண்டிய இன்றியமையாக் கடமையைக்கூட இந்தியாவுக்கு வெளியே சென்று டில்லியை ஆண்ட எந்த முஸ்லிம் மன்னரும் நிறைவேற்ற விழையவில்லை என்பது கவனிக்கத் தக்கதாகும். அந்த அளவுக்கு அந்நிய நாடு எதையும் காணாது இந்திய மண்ணோடு ஒன்றி, இந்திய மன்னர்களாகவே விளங்கியுள்ளனர். இந்திய வரலாற்றிலேயே ஆட்சியதிகாரம் செலுத்தியவர்களில் இந்திய நாட்டுக்கு வெளியே தங்கள் அடிப்படையை வைத்துக் கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள் ஆங்கிலேயர், ஃபிரெஞ்சுக்காரர்கள், போர்ச்சுக்கீசியர்களே ஆவர். இந்த அடிப்படையிலேயே மறைந்த நேருஜி, அன்னை இந்திரா, அமரர் ராஜீவ் ஆகியோர் இங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் பாரம்பரிய மிக்க இந்திய மண்ணின் மைந்தர்கள்-பாரதப் புதல்வர்கள் என்றும், அவர்களால் காலங்காலமாகப் பின்பற்றப்பட்டு வரும் இஸ்லாமிய மார்க்கம் இந்தியச் சமயமே ஆகும் எனவும் அடிக்கடி முழங்கி வந்தனர்.