பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

145


இந்த அடிப்படையில் பலவருடைய போதனைகளும் வீர சைவர்களுடைய கோட்பாடுகளும் இஸ்லாமியத்தோடு மிக நெருக்கமாக இருப்பதைப் பற்றி கூறும்போது, “பஸவருடைய போதனைகள் ஆதியில் அன்று நிலவியிருந்த ஹிந்து கோட்பாடுகள், சடங்குகள், சமூக வழக்காறுகள் ஆகிய அனைத்தையும் ஒருங்கே மறுப்பதாக அமைந்திருந்தது. வீர சைவர்கள் பரமசிவம் என்ற பெயரில் ஒரே கடவுளை வணங்குபவர்களாக ஆனார்கள். அந்த ஒரே கடவுள் உருவமற்றவன்; தனித்தவன்; யாரையும் சார்ந்தவன் அல்லன்; ஆனந்த வடிவானவன்; எந்த மாற்றமும் இல்லாதவன்; யாவற்றுக்கும் மேலானவன்; அவன் தனிமனிதனுடைய ஆன்மாவுக்கு வழிகாட்டுவதற்காக ‘அல்லமா பிரபு’ என்ற பெயருடன் உலக ஆசானாக வெளிப்படுகிறான். அவர்களுடைய கொள்கையின்படி ஆன்மாவுடைய பிரயாணத்தில் மூன்று கட்டங்கள் இருக்கின்றன. முதற் கட்டத்தில் இறைவனிடத்தில் அசைக்க முடியாத நம்பிக்கையும் விரதங்கள் அனுஷ்டிப்பதும் பக்தி செயல்களில் ஈடுபடுவதுமாகும். இரண்டாவது கட்டத்தில் இறைவனைப் பரிபூரணமாக சார்ந்து, அகந்தையை ஒழித்து அவனிடம் தன்னையே ஒப்புவித்து விடுவது; மூன்றாவது கட்டத்தில் இறைமையோடு கலந்து ஆனந்த மயமாய் ஆகிவிடுவது.

“இவை எல்லாவற்றையும்விட வீர சைவர்களுடைய நடைமுறைதான் இங்கு முக்கியமாகக் கவனிக்கத்தக்கவை. பெண்ணின் சம்மதமின்றித் திருமணம் இல்லை. விவாகரத்து அனுமதிக்கப்பட்டது. விதவைகள் எந்தவிதமான அபசகுனத்தினுடையவும் அறிகுறியாய் இல்லாமல் மரியாதையுடன் நடத்தப்பட்டார்கள். அவர்களுக்கு மறுமணம் செய்து கொள்ள உரிமை உண்டு. பிரேதங்கள் எரிக்கப்படாமல் அடக்கம் செய்யப்பட்டன. சிரார்த்தம் போன்ற சடங்குகள் இல்லை. மறு பிறப்பில் நம்பிக்கை இல்லை.