பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

173


மனிதர்களுக்கிடையே எந்த வித வேறுபாட்டுணர்வையும் வெளிப்படுத்தி, அவர்களை வருத்துவதை இஸ்லாம் அறவே அனுமதிக்கவில்லை. மற்றவர்களிடையே அன்பையும் பாசத்தையும் பொழிந்து, இணக்கத்தோடு வாழ வழி வகுக்கிறது. இத்தகு செயற்பாடும் அண்டை வீட்டாரிடமிருந்தே தொடங்கப்பட வேண்டுமென இஸ்லாம் விதிக்கிறது.

அண்டை வீட்டிலிருந்து அகில உலக அமைதி

சமுதாயத்தின் அடிப்படை அலகாக அமைவது குடும்பம். சாந்தியையும் சமாதானத்தையும் உயிர் மூச்சாகக் கொண்ட இஸ்லாம் உலக அமைதிக்கான பணி அண்டை வீடுகளிடையே உருவாகி நிலைபெறும் உறவைச் சார்ந்தே அமைய முடியும் என்ற கருத்தை அழுத்தமாக உணர்த்துகிறது.

அண்டை வீட்டினரிடையே உறுதிப்படும் உறவின் உன்னதம் சங்கிலிக் கோர்வையாக வீடு, தெரு. ஊர், நாடு உலகம் என விரிந்து சிறக்கிறது. அஃது ஒருமைப்பாட்டின் இணைப்புப் பாலமாகவும் அமைகிறது. எனவேதான், அடுத்தடுத்துள்ள அண்டை வீட்டாரின் கடமைகளைப் பற்றி இஸ்லாம் பெரிதும் அறிவுறுத்துகிறது. அண்டை வீட்டார் கைக்கொண்டொழுகத்தக்க கடமைகளைப் பற்றிப் பெருமானார் பெரிதும் பேசியுள்ளார்.

அண்டை வீட்டார் உறவினர்களாகவோ உறவினர் அல்லாத முஸ்லிம்களாகவோ அல்லது முஸ்லிம் அல்லாத பிற சமயத்தவர்களாகவோ இருக்கலாம். அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களிடம் இன, மத, மொழி வேறுபாடு அறவே இல்லாது அவர்களிடம் நேசமும் பாசமும் காட்டிப் பழக வேண்டும். அன்பும் பண்பும் கொண்டு ஒருங்