பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

188


விரும்பும்போது இஸ்லாத்தை ஏற்கலாம்

இதைக் கேட்டு நெஞ்சம் நெகிழ்ந்த ஸப்வான் தான் இஸ்லாத்தை ஏற்க இரண்டு மாத கெடு கேட்டார். தாங்கள் விரும்பும் காலத்தை எடுத்துக் கொள்ளலாம். அதுவரை பழைய சிலை வணக்கச் சமயத்திலேயே இருந்து கொள்ளலாம் எனக் கூறினார். அப்போது முதல் ஸப்வான் அண்ணலாருடனேயே இருக்கத் தொடங்கினர். ஆயினும் தன் சமயக் கொள்கை, கோட்பாடுகளைப் பின்பற்றியே வந்தார். அப்போது, ஹுனைன் என்ற பகுதியில் சண்டை நடந்தது. ஸப்வான் அண்ணலாருடன் போர்க்களம் சென்ற போதிலும் ஸப்வான் போரிடாமல் நடுநிலை வகித்தார். இறுதியில் பெருமானாருக்குப் பெரு வெற்றி கிடைத்தது. வெற்றி பெற்ற பொருட்களை, போரிடாது நடுநிலை வகித்த ஸப்வான் ஆசையோடு வெறித்துப் பார்ப்பதைக் கண்ணுற்ற பெருமானார். ஸப்வான் இப்பொருட்களின் மீது உங்கட்கு விருப்பமிருந்தால் வேண்டியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள் என மகிழ்வோடு கூறினார்.

முஸ்லிம்களுக்கு காலமெல்லாம் மாளாத துன்பங்களைத் தந்துவந்த தன்னை மன்னிப்புக்குப் பிறகும் இஸ்லாத்தில் இணைய கடுகளவும் வற்புறுத்தாது, பழைய சிலை வணக்கச் சமயத்திலேயே இருக்க அனுமதித்த பெருமானார், அன்னிய சமயத்தவனான, முஸ்லிம்களோடு சேர்ந்து போரிடாத நிலையிலும் போரில் கிடைத்த வெற்றிப் பொருள்களை விரும்பும் அளவு எடுத்துக் கொள்ள அனுமதித்த அண்ணலாரின் தயாளம், கருணை ஸப்வானை வெட்கித் தலைகுனியச் செய்துவிட்டது. அண்ணலாரின் சமயப் பொறை, ஸப்வானை இஸ்லாத்தில் இணையச் செய்தது.

இறுதிவரை இஸ்லாத்துக்கு விரோதியாக இருந்த ஸப்வானை மக்கா வெற்றிக்குப் பிறகு கடுமையாகத் தண்டித்