பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

194

கள் அவருக்குத் தஞ்சமோ பாதுகாப்போ அளிக்காமல் அவரை குறைஷிகளிடம் ஒப்படைத்துவிட வேண்டும். ஆனால், மதீனாவாசி எவராவது மதம் மாறி மக்காவுக்குள் வந்து விட்டால், அவரைக் குறைஷிகள் அடைக்கலமாக ஏற்றுக் கொள்வர். முஸ்லிம்கள் அவர் மீது உரிமை பாராட்டித் திரும்பக் கேட்கக் கூடாது.

(5) அரேபிய நாட்டிலுள்ள இம் மக்கள் இவ்விரு கட்சியினரில் எவருடனும் நேச உறவை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

இந்த ஒப்பந்தத்தை இரு தரப்பு உடன்படிக்கை என்பதைவிட ஒரு சார்பு ஒப்பந்தம் என்று கூறுவதே பொருத்தமாகும். அண்ணலாரையும் அபூபக்ரையும் தவிர, மற்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் இவ்வொப்பந்தம் உடன்பாடாக இல்லையென்றாலும் நபிகள் நாதரின் சமாதான உணர்வுக்கிணங்க, அனைவரும் ஒப்புதலளித்து மதீனா திரும்பினர். அப்போது வல்ல அல்லாஹ் வஹீ மூலம்,

“(நபியே! ஹுதைபியா சமாதான ஒப்பந்தத்தின் மூலம் நிச்சயமாக நாம் உமக்கு (மிகப் பெரிய) தெளிவானதொரு வெற்றியைத் தந்தோம்” (திருக்குர்ஆன் 48:1) என்று அறிவித்தான்.

இந்த ஒப்பந்தம் மூலம் தாங்கள் படுதோல்வியடைந்து திரும்புவதாகக் கருதி மனம் புழுங்கிய முஸ்லிம்களுக்கு இறைவனின் ‘வெற்றி’ அறிவிப்பு வியப்பைத் தந்தபோதிலும் முஸ்லிம்களின் மாபெரும் வெற்றிக்கு அவ்வொப்பந்தமே ராஜபாட்டையாக அமைந்தது. 1,400 ஹஜ் பயணிகளாக வந்த முஸ்லிம்களை மக்காவினுள் நுழைய விடவில்லை. ஆனால், அடுத்த ஆண்டே 10,000 முஸ்லிம்களுக்கு மக்கா நகரம் தானாக கதவு திறந்து விட்டு வரவேற்றது என்பது வரலாறு.