பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

216

சமயப் போக்கிற்கும் அப்பாற்பட்ட நிலையில், சமுதாயத்தவர் எல்லோருக்கும் பொதுவாயமைந்துள்ள, சமயச் சார்பற்ற பொதுப் பண்பாடாகும்.

ஒவ்வொரு சமயப் பண்பாடும் அச்சமயத்தின் உட்கிடக்கைக்கிணங்கவே அமையும். அது இயல்பும்கூட. இருப்பினும் சமயப் பண்பாடானது தேசியப் பொதுப் பண்பாட்டின் கூறுகள் பலவற்றை தன்னுட் கொண்டதாக அமைவதும் தவிர்க்க முடியாததாகும். இந்திய முஸ்லிம் பண்பாடும் அரேபிய முஸ்லிம் பண்பாடும் ஒரே சமய அடிப்படையைக் கொண்டிருப்பினும் அவற்றிடையே குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கவே செய்கின்றன. இந்தியக் கிருஸ்துவப் பண்பாட்டிற்கும் ஐரோப்பிய கிறிஸ்துவப் பண்பாட்டிற்குமிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உண்டு. இஃது அவ்வப்பகுதி மக்களின் தேசியப் பண்பாடுகளின் தாக்கத்தால் அமைவதாகும். இது தவிர்க்க முடியாததும்கூட. ஹிந்து சமயப் பண்பாடும்கூட ஒரே நாட்டிற்குள், அவ்வப்பகுதி சமூகப் பொதுப்பண்பாட்டின் தாக்கத்திற்கேற்ப மாறுதலைப் பெற்றே வழங்கி வருகின்றன என்பது எண்ணிப் பார்க்கத் தக்கதாகும். சிலசமயம் சமூகப் பண்பாடுகளில் மதப் பண்பாடுகள் செல்வாக்குச் செலுத்துவதும் உண்டு.

ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் சமயத்தைச் சார்ந்த கலை, ஆச்சார, பண்பாடுகளை முழுமையாகப் பேணி நடக்க முழு உரிமை பெற்றவராவார். அதனை மாற்றுச் சமயத்தவர் மதித்து நடக்க வேண்டியது இன்றியமையாக் கட்டுப்பாடு ஆகும். ஆயினும், தத்தமது சமயச் சார்பான கலை, ஆச்சாரங்களை பிறரும் பேணி நடக்கத் தூண்டும் வகையில் நேரடியான அல்லது மறைமுகமான தூண்டுதல்கள் செய்வது ஏற்றுக் கொள்ளத்தக்கதன்று. இச்செயல் சமய சகிப்புத் தன்மை அல்லது சமய