பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

217

நல்லிணக்கப் போக்கு வளர்வதற்கு வளமான வழியாக அமைய இயலாது என்பதை நாம் நன்கு உணர்தல் வேண்டும்.

‘எனவே, அவரவர் சமயப் பண்பாடு அவரவர் சமயத்தவர்கட்கு’ என்பதே ஏற்றுக் கொள்ளத்தக்க இனிய போக்காக அமைய இயலும். இதற்கு வாய்ப்பளிக்கும் வகையில் எல்லோருக்கும் பொதுவான சமுதாயமும் அதை ஆட்சி செய்யும் பொது அரசும் சமயச் சார்பற்ற தன்மையை அடித்தளமாகக் கொண்டு இயங்க வேண்டியது இன்றியமையாததொன்றாகும். இதைக் கருத்தில் கொண்டே நம் நாட்டின் மிகப்பெரும் தேசியத் தலைவர்கள் சமுதாய-சட்ட மேதைகள் நாட்டின் அரசமைப்புச் சட்டத்தை வகுக்கும்போது, சமயச் சார்பற்ற தன்மையை அரசின் அடித்தளக் கொள்கையாக அறிவித்தார்கள். இதன் மூலம் அவரவர் தனிவாழ்வில் அரசோச்சம் பல்வேறு மதங்களும் சமயச் சடங்கு, சம்பிரதாயங்கள் பொது வாழ்வான சமுதாய வாழ்வை பாதிப்பதே இல்லை. அதைப் பற்றி சற்று ஆராய்வோம்.

மதச் சார்பின்மைக் கொள்கையின் உட்பொருள்

நமது இந்திய அரசமைப்புச் சட்டம் பல தனித்தன்மை வாய்ந்த சிறப்புக்களுடையதாக விளங்குகிறது. அவற்றுள் குறிப்பிடத்தக்க ஒன்று ‘செக்குலரிஸம்’ என அழைக்கப் படும் ‘சமயச் சார்பின்மை’க் கொள்கையாகும்.

பல இனங்களையும் பல மதங்களையும் உடைய நாடாக இந்தியா அமைந்திருப்பதால் ‘இந்திய அரசின் மதம்’ என எதனையும் ஏற்க வேண்டிய அவசியமில்லை என அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் ஒரு மனதாகக் கருதி, ‘சமயச் சார்பின்மை’க் கொள்கையை அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெறச் செய்தார்கள். இதன் மூலம்