பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

விளக்கம் செய்ய முற்பட்ட சமய அன்பர்கள் தங்கள் வெறுப்பு, விருப்புகளை வேத வசனங்களில் சேர்க்கவும் நீக்கவும் செய்தனர். இறை தூதருக்குப் பின்னர், அவரது இறைநெறியை, வேத வழியில் பரப்புவதாகக் கூறிக் கொண்டே. வேத வசனங்களை மாற்றியும் திருத்தியும் தீர்க்கதரிசியின் வாழ்வைத் தம் போக்கில் அமைத்து மக்களிடையே பரப்புவர். இத்தகைய போக்கால் இறைதூதர்களின் வாழ்வும் வாக்கும் இறை வேதங்களின் உட்கிடக்கையும் தடம் புரண்ட நிலையில், மாறுபட்ட போக்கில் அமைவது தவிர்க்க முடியாததாகியது. இவ்வாறு வழி மாற்றப்பட்ட தீர்க்கதரிசியின் மாறுபட்ட, அவரால் உணர்த்தப்பட்ட வேதத்தின் மாசுபட்ட போக்கை மாற்றி, மீண்டும் மக்களை நேர் வழிக்குக் கொண்டுவந்து. சரியான தடத்தில் வழி நடத்த மீண்டும் ஒரு இறை தூதர் இறைவனால் அனுப்பப்படுவர். மக்களுக்கு இறைநெறி புகட்ட மீண்டும் அவருக்கு மூலவடிவில் முந்தைய அடித் தளத்திலேயே திரும்பவும் வேதம் அளிக்கப்படும். இதுவே இறை தூதர்களின் வரலாறாகவும் இறை வேதங்களின் போக்காகவும் அண்ணலார் காலம் வரை அமைந்திருந்தது.

இறை தூதர்-இறைவேதங்களில்
வேற்றுமை இல்லை

மனிதர்களில் மட்டுமல்ல அவர்களை இவ்வுலகில் இறை நெறியில் வழி நடத்த வந்த இறை தூதர்களில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற வேறுபாடில்லை. அவர்கட்கு இறைவனால் வழங்கப்பட்ட வேதங்களிலும் சிறந்தது, சிறப்புக் குறைந்தது என்ற தாரதம்மியம் கடுகளவும் இல்லை. அனைத்து இறை தூதர்களும் அவர்கள் பெற்ற அனைத்து இறை வேத வாக்குகளும் ஒரே நிலைப் பாட்டையுடையனவேயாகும்.