பக்கம்:இஸ்லாமும் சமய நல்லிணக்கமும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

இல்லை; எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு மட்டுமே அத்தகு தகுதிப்பாடு உண்டு என்பதனால் சாதாரண மனிதரை மாநபிக்கு குருவாக அமர்த்தாமல் இறைவனே திருநபிக்கு குருவாக விளங்கும் வாய்ப்பளித்தான் போலும்.

இறைவனின் பிரதிநிதியே மனிதன்

இஸ்லாத்தைப் பொறுத்தவரை மனிதனைப் பற்றிய கணிப்பு மிக உன்னதமானதாகும். இஸ்லாமிய மரர்க்கம் மனிதனை மிக உயர்வாக மதிக்கிறது. மாபெரும் சிறப்புக் குரியவனாகக் கருதுகிறது. இன்னும் சொல்லப்போனால் இறையம்சம் பொருந்தியவனாக இஸ்லாம் மனிதனைப் போற்றுகிறது. ஆதி மனிதர் ஆதாமை இறைவன் ‘ரூஹூ’ ஊதி உருவாக்கியதால் மண்ணுலகில் மனிதன் இறைவனின் அம்சங்கொண்ட இறைப் பிரதிநிதியாகவே கருதப்படுகிறான். ஆதித் தாயார் ஹவ்வாவை ஆதாமின் விலாவிலிருந்து இறைவன் உருவாக்கினான்.

இன்று பல்கிப் பெருகியிருக்கும் மனிதகுலம் முழுமை யின் தோற்றுவாயாகத் திகழ்பவர்கள் ஆதிப் பிதாவாகிய ஆதாம் (அலை) அவர்களும் ஆதி மாதாவாகிய ஹவ்வா (ஏவாள்) தாயாரும் ஆவார்கள். இவர்கள் இருவரின் வாயிலாகவே மனுக்குலம் முழுமையும் தழைத்து வளர்ந்துள்ளதைத் திருக்குர்ஆன் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

ஒரே ஆத்மா

ஒரே ஆத்மாவிலிருந்தே மனிதகுலம் முழுமையும் பல்கிப் பெருகியுள்ளது. இதன் மூலம் மனிதகுலம் முழுமையும் ஒன்றே என்ற அடிப்படையை இஸ்லாமியத் திருமறையும் உறுதிபடப் போதிக்கிறது.

“மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே