பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13


அனைவர்க்கும் பொது விழா

தமிழகத்தைப் பொருத்தவரை மீலாது விழா பெரு நகரங்கள் முதல் சாதாரணச் சிற்றூர்வரை சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்பட்டு வருவதும் அவ்விழாக்களிலே பேசுபவர்களில் கணிசமான எண்ணிக்கையினர் பிற சமயங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதும் எண்ணத்தக்கதாகும். இத்தகைய விழாக்களில் முஸ்லிம்களோடு முஸ்லிமல்லாதவர்களும் கணிசமான எண்ணிக்கையில் பங்கு பெறுவது, பெருமானர் (சல்) அவர்களின் வாழ்வையும் வாக்கையும் பற்றி பிற சமய மக்களிடையே கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்ளக் கிடைக்கும் அரிய வாய்ப்பாக அமைகிறது என்பதில் ஐயமில்லை.

நபிகள் நாயகம் (சல்) அவர்கள் முஸ்லிம்களுக்காக மட்டும் இறைவனால் அனுப்பப்பட்ட இறைதூதர் அல்லர்; அவர் மனித குலம் முழுமைக்கும் இறைநெறி புகட்ட வந்த இறை தூதர் ஆவார். எனவே, அவர் பிறந்தநாளைக் கொண்டாட முஸ்லிம்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ அதே அளவுக்கு உரிமை பிற சமய மக்களுக்கும் உண்டு.

இஸ்லாமியக்கொள்கை, கோட்பாடுகளை அண்ணலார் வாழ்க்கை வழியே பிற சமயத்தவர் மத்தியில் எடுத்துச் சொல்லும் மிகச் சிறந்த வாய்ப்பை இத்தகைய மீலாது விழாக் கூட்டங்கள் எளிதாக நமக்கு ஏற்படுத்தித்தருகின்றன என்பதிலும் ஐயமில்லை.

தமிழ்நாட்டில் எங்கேனும் மீலாது விழாக்களில் பங்கேற்க யாரேனும் அழைத்தால், அவர்களுக்கு நான் விடுக்கும் ஒரே வேண்டுகோள், நடத்துகின்ற மீலாது கூட்டத்தை பிற சமயத்தவர்களும் செவிமடுக்கும் வகையில் முச்சந்திகளில் நடத்துங்கள். நான் தாராளமாக வந்து கலந்து கொள்கிறேன். பள்ளிவாசல் வளாகங்களில் முஸ்லிம்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் மீலாது விழா நடத்துவதாக இருந்தால் மௌலவிகளை அழையுங்கள்