பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/158

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

156

இருக்கின்றானோ அவன் வாழ்க்கையில் தன்னை மனிதப் புனிதனாக இருக்கத் தன்னைத் தயார் படுத்திக் கொண்டுவிட்டான் என்பதுதான் பொருள். யாராவது ஒருவன் நாம் ஏற்க முடியாத வகையில் தவறாக நடந்து கொண்டுவிட்டான் என்றால் அவனைப் ‘பண்பாடில்லாதவன்' என்றுதான் உடனடியாக ஏச முற்படுகிறோம். ஏனெனில் நற்செயல்கள் அனைத்திற்கும் அடித்தளமாக அமைவது பண்பாடு ஆகும். இதையே வள்ளுவர் 'பண்புடையாளர் பட்டுண்டு உலகம்' என்று கூறினார்.

பண்பாடும் வேறுபாடும்

'பண்பாடு' என்பது நாட்டுக்கு நாடு, இனத்துக்கு இனம், மொழிக்கு மொழி, சமயத்துக்குச் சமயம் வேறுபடும் தன்மை கொண்டதாகும். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் அந்தந்த மண்ணுக்குரிய பழக்க வழக்கங்கள், உணர்வுகள், சிந்தனைகள், சூழ்நிலைகள் இவற்றையெல்லாம் அடித்தளமாகக் கொண்டு மரபு முறையிலே வரக் கூடிய ஒன்று பண்பாடு.

சமயப் பண்பாடும் சமுதாயப் பண்பாடும்

பண்பாடு என்பது சமய, இன, மொழி அடிப்படையில் அமையினும் மனிதர்கள் அனைவருக்கும் பொதுவான ‘சமுதாயப் பண்பாடு' எல்லோருக்கும் பொதுவான தாயமையும். சான்றாக, ஒரு தமிழ் முஸ்லிமை எடுத்துக் கொண்டால் அவன் பின்பற்றும் மார்க்க சம்பந்தமான சிந்தனைகள், உணர்வுகள், செயல்பாடுகள் அவர்கள் வாழும் இல்லத்துள்ளும் வணக்கத்தளமான மசூதிக்குள்ளும் இருக்கும். அம் முஸ்லிம் வீட்டை விட்டோ அல்லது மசூதியைவிட்டோ வெளிப்பட்டு சமுதாய வீதியில் கால் வைத்துவிட்டால் தமிழருக்கென்று இருக்கக் கூடிய பொதுப் பண்பாட்டின் அடிப்படையிலேதான் அவன் இயக்கம் முழுமையும் அமைந்திருக்கும். இதுதான் தேசியப்