பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/178

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

176

போர்வாளை வைத்துவிட்டு, வெறுங்கையோடு ஓடிவந்தது நினைவுக்கு வந்தது. உடல் நலிவும் வெளியேற வேண்டும் என்ற சங்கட நிலையும் அவனுக்கு வாளைப்பற்றிய சிந்தனை இல்லாமல் செய்துவிட்டது. விலைமதிப்புள்ள அவ்வாளை இழக்க அவன் உள்ளம் சம்மதிக்கவில்லை. எவ்வாறாயினும் போர்வாளை மீண்டும் பெற்றே தீருவது என்ற எண்ணத்தில் தான் இரவு தங்கியிருந்த அண்ணலார் வீடு நோக்கி ஓடி வந்தான்.

பொழுது விடிந்ததும் விருந்தாளி தங்கியிருந்த அறையை வந்து பார்த்தார் அண்ணலார் (சல்) அவர்கள். அங்கு யாரும் இல்லாததோடு அறை, படுக்கை, விலையுயர்ந்த விரிப்பு, போர்வை எல்லாமே வாந்தி, பேதியால் மிகவும் அசுத்தமாகக் கிடந்தன. இரவு விருந்தாளிக்கேற்பட்ட சுகக் கேட்டை எண்ணி வருந்தியவராக அறையைச் சுத்தப் படுத்தி, அசுத்தமாகிவிட்ட போர்வையைத் துவைக்க எடுத்துச் சென்று சுத்தப்படுத்தலானார்.

இந்நிலையில் வாளை மீண்டும் எடுத்துச் செல்ல பெருமானார் இல்லத்தை முரடன் அணுகியபோது அங்கே அண்ணலார் முரடனால் அசுத்தப்படுத்தப்பட்ட விரிப்புகளையும் போர்வைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டிருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அக்காட்சி அவனை மிகவும் வருத்திவிட்டது.

விருந்தாளி திரும்ப வந்திருப்பதைக்கண்ட அண்ணலார் (சல்) அவர்கள் விரைந்து சென்று விருந்தாளியை அணுகி, “நண்பரே! இரவு உடல் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்போது எப்படி இருக்கிறீர்கள். உங்கள் உடல் சீர்பட மருந்து வைத்திருக்கிறேன். உண்டு இளைப்பாறிச் செல்லலாம். நீங்கள் மறந்து வைத்துவிட்டுப் போனவாள் இதோ எடுத்து வருகிறேன்” என்று கூறிச் சென்று மருந்தையும் வாளையும் எடுத்து விரைந்து வந்தார்.