பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/201

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

199


இதற்கெல்லாம் எதை அடிப்படைக் காரணமாகக் கருதுகிறீர்கள்? பணம் சம்பாதித்தால் போதும் என்ற நினைப்புத்தான். பணம் மட்டுமே வாழ்க்கைப் பாதுகாப்பு என்ற எண்ணமே பலரிடமும் அழுத்தமாக இருந்து வருகிறது. நம் வாழ்க்கைக்குத் தேவையானவற்றுள் பணம் முக்கியமான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால், பணமே வாழ்க்கை என்று எண்ணுவது அறிவீனம். நமது வாழ்க்கைக்குப் பாதுகாப்பு பணமல்ல; கல்வியே உண்மையான பாதுகாப்புக் கவசம். இதை அலீ (ரலி) அவர்கள் அற்புதமாக விளக்கிக் கூறியுள்ளார்கள். “பணத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும். ஆனால், கல்வி உங்களைப் பாதுகாக்கிறது” என்பது அவரது பொருள் மொழியாகும்.

எது பாதுகாப்பு?

இந்தப் பேருண்மையைச் சற்று ஆழ்ந்து பார்த்தால் அதன் முழுப் பொருளும் நமக்குத் தெளிவாகப் புரியும். நண்பர்களே! நீங்கள் ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். நாம் படாத பாடுபட்டுப் பணத்தைச் சம்பாதித்து, நீண்ட நாளைக்குப் பிறகு பதினைந்து நாள் விடுமுறையில் ஊர் திரும்புகிறோம். மற்றவர்கள் மத்தியில் நம் செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காக தடபுடலாகச் செலவு செய்கிறோம். பிள்ளைகளுக்குச் 'சுன்னத்' (கத்னா) செய்யும் நிகழ்வைக்கூட தெருவடைத்து பந்தல் போட்டு, பாட்டுக் கச்சேரியோடு நடத்துகிறோம். ஊர் விருந்து தந்துப் பாராட்டுப்பெற விரும்புகிறோம். சம்பாதித்துச் சென்ற பணத்தையெல்லாம் ஆடம்பர, டாம்பீகச் செலவுகளில் தொலைத்து விட்டுப் பழைய ஃபக்கீரைப் போல மீண்டும் பாலைவன நாடுகட்கு பழையபடி பாடுபட திரும்புகிறோம். சிலர் சம்பாதித்த பணத்தைக் கொண்டு ஊரிலே நிலமாகவும் வீடாகவும் தோப்புகளாகவும் வாங்கிப் போடுவதிலேயே கவனமாக இருக்கிறார்கள். இவைகளெல்லாம் ஊரிலே உள்ளக் குடும்பத்துக்கும் தனக்கும் தக்க பாதுகாப்பாக