பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

261

தம் தலைமையுரையில் இன்றைய சமுதாயப் போக்கைப் பற்றி விவரிக்கும்போது சற்று உணர்ச்சி வசப்பட்டவராக 'கைக்கூலி'யின் தீங்குகளைக் கடுமையாகச் சாடினார். அதைக் கேட்டு நான் பெருமகிழ்வடைந்தேன். சமுதாயத்தின் மேல் மட்டத்தில் வாழுபவர்களிடையே இத்தகைய சமூக உயர் சிந்தனைகள் பூக்கத் தொடங்கியது என்றால் அதன் நறுமணம், விளைவுகள் சமூகத்தின் அடிமட்டம் வரை விரைந்து பரவி நல்விளைவுகளை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

கைக்கூலி பெருநோய்

கைக்கூலி எனும் பெருநோய் இங்குள்ள பிற சமயச் சார்புள்ள சில சமூக மக்கள் மூலம் பரவிய மாபெரும் சமுதாய நோய். இதனால் இஸ்லாமியப் பெண்கள் அனுபவித்து வரும் தொல்லைகளும் துயரங்களும் கொஞ்ச நஞ்சமல்ல. தன்னைப் போல் இறையான்மா பெற்றவர்களே பெண்கள் என்பதற்கு மாறாக, மார்க்கெட்டில் வாங்கப்படும் பொருட்களைப்போல் பெண்கள் கருதப்படவும் நடத்தப்படவுமான இழிநிலையே இன்றுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மை.

நாணயத்தின் இருபுறமே ஆணும் பெண்ணும்

இதற்கு அடிப்படையான காரணங்களில் முக்கியமான ஒன்று பெண்களைத் தாழ்மையாகக் கருதும் தவறான மனப்போக்காகும். உலகத்துச் சமயங்களிலேயே உன்னதமான இடத்தைப் பெண்களுக்கு வழங்கியிருக்கும் மார்க்கம் இஸ்லாம் என்பதை அறிவுலகம் நன்கு அறிந்து போற்றி வருகிறது.

ஏனெனில், மனிதன் பெற்றுள்ள இறை ஆன்மாவின் ஒரு பகுதியாக அமைந்திருப்பவளே பெண். ஆணுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு. ஆனால், அவை செயல்படும் வழி முறைகளுள் வேறுபாடு உண்டு.