பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

முடியாத இணைகோடுகளாகவே இருந்து வருகின்றன. இரண்டும் ஒத்திணங்கிச் செல்ல இயலா நிலை.

இந்து மதத் தத்துவங்கள் சிறந்தவைதான். அதில் இருக்கிற அடிப்படைத் தத்துவங்கள் தவிர, மற்றவையெல்லாம் அவ்வப்போது அவரவர் விருப்பத்திற்கேற்ப கொண்டு வந்து சேர்க்கப்பட்டவைகளாகும். இந்து சமயத்தத்துவ விளக்கமாகப் புராணங்கள், இதிகாசங்கள், அவற்றின் கதைகள், கதை மாந்தரின் செயல்கள் அமைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்து சமய இளைஞர் ஒருவர் - அறிவியலை ஆழக்கற்றறிந்த ஒருவர் - தான் சார்ந்த இந்து சமயத் தத்துவங்களை விளக்கும் புராணக் கதைகளைப் படிக்கும் போது, பிரத்தியட்ச உண்மைகளுக்கும் புராணச் சம்பவங்களுக்குமிடையே எந்தவிதத் தொடர்பும் இல்லாததைக் கண்டு மலைப்பும் திகைப்பும் அடைகிறார். உண்மைக்கு முற்றிலும் புறம்பாக அமைந்திருப்பதைக் கண்டு மிரண்டு போய் விழிக்கிறார். சான்றாக, 'அசுரன் உலகைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு கடலுக்குள் சென்று ஒளிந்து கொண்டான்' என்று புராணக் கதை கேட்கும் போது கடலே உலகத்தில்தானே இருக்கிறது. பின் உலகைப் பாயாகச் சுருட்டும் போது, சுருட்டிய பாய்க்குள்தானே கடலும் இருக்க முடியும். பின், எந்தக் கடலுக்குள் சென்று ஒளிய முடியும்?' என்று வினாத் தொடுத்தபடி ஏதும் புரியா நிலையில் திணறுகிறார்; திகைக்கிறார். ஒன்றோடொன்று ஒட்டி வரவில்லையே என்று விழிக்கிறார். இங்கு மட்டுமில்லை, ஐரோப்பிய நாடுகளிலும் இந்நிலைதான் நிலவியிருந்தது. அறிவியலுக்கும் கிருஸ்தவ சமயத்துக்கும் ஏற்பட்ட மோதல்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை வரலாறு இன்றும் விவரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

சான்றாக, கோப்பர்நிக்கஸ் எனும் வானவியல் விஞ்ஞானி தொலைநோக்கியாகிய 'டெலஸ்கோப்'பைக்