பக்கம்:இஸ்லாம்-ஆன்மீக மார்க்கமா அறிவியல் மார்க்கமா.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82


துணைவேந்தரிடம் 'மீலாது விழா' பற்றிக் கூறியவுடனேயே பல்கலைக் கழகத்தின் சார்பில் ஒரு சமய விழாவை எப்படிக் கொண்டாடுவாய் என்று கூறினார். இப்படி ஒரு கேள்விக்காகத்தான் நான் காத்திருந்தேன். நபிகள் நாயகம் அவர்கள் இஸ்லாமிய சமுதாயத்திற்காக மட்டும் வந்தவரில்லை. இறுதி இறைத் தூதராக உலகத்திற்கே வழிகாட்ட இறைவனால் அனுப்பப்பட்டவர். அவரும் வானுலகிலிருந்து இறக்கப்பட்டவரில்லை. மக்களிலிருந்தே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் உலக மக்களுக்காக வந்தவரேயல்லாது இஸ்லாமிய மக்களுக்காக மட்டுமே வந்தவர் இல்லை. ஆகவே, இங்கே இருப்பவர்களுக்கும் சேர்த்துத்தான் அவர் வந்தார். ஆகவே, இந்த விழாவை நடத்த எல்லோருக்கும் உரிமை உண்டு என்று விளக்கிக் கூறியதைக் கேட்ட துணைவேந்தர் என் கோரிக்கையை ஏற்று 'மீலாது விழா' நடத்திக் கொள்ள அனுமதியளித்தார். அனைத்து மதத்தினரும் பெருமளவில் பங்கேற்குமாறு பெரும் திருவிழாவாக அதை நடத்த முற்பட்டேன்.

விழாவில் பேசிய நான்கு பேச்சாளர்களில் ஒருவர் மட்டுமே முஸ்லிம் மற்றவர்களெல்லாம் இந்து சமயம் முதலான பிற சமயங்களைச் சார்ந்தவர்கள். எதற்காக இங்கு இதைக் குறிப்பிடுகிறேன் என்றால், இம்மாதிரி விழாக்களில் அதிக அளவில் பிற சமயத்தைச் சார்ந்த பேச்சாளர்களை ஏற்பாடு செய்ய வேண்டும். கேட்பதற்கும் பிற சமய மக்கள் பெருமளவில் கூடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்.

அன்றைய விழாவில் பேசிய தத்துவத்துறைப் பேராசிரியர் கனகசபாபதி அவர்கள் பெருமானாரைப் பற்றியும் அவரது போதனைகளைப் பற்றியும் இஸ்லாமிய நெறியைப் பற்றியும் திறம்படப் பேச வேண்டுமே என்பதற்காக பதினைந்து நாட்கள் எவ்வளவு நூல்கள் கிடைக்குமோ அவ்வளவு நூல்களையும் படித்து குறிப்புகளைச் சேகரித்து,