பக்கம்:ஈச்சம்பாய்.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சு. சமுத்திரம்

111


இந்தக் காலை வரைக்கும் யோசிக்கிறாள் யோசிக்கிறாள், அப்படி யோசிக்கிறாள்; ஆனாலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. வீணை மாதிரியான மரப்பெட்டிமேல் கிடந்த அந்தப் புடவையையும், ஜாக்கெட்டையும் எடுக்கிறாள். இடுப்பில் சுற்றப் போகிறாள். பிறகு சுற்றப்போனதை தலையைச் சுற்றிக் கீழே போடுகிறாள். தாழை மட்டையில் செய்யப்பட்ட தொப்பியை, தலையில் இருந்து எடுக்கிறாள். பிறகு தலையையே எடுத்ததுபோல் துடிக்கிறாள். மார்புக்கு மேல் ஒன்றுமில்லாத நிர்வாணப் பகுதிக்கு நிவாரணமாக, ஜாக்கெட்டை எடுக்கிறாள். அதைப் போட்டே ஆகவேண்டும் என்பதுபோல், கழுத்தில் மார்பகங்களை மறைத்துக் கிடக்கும் பச்சைப்பாசி, நீலப்பாசி முதலிய பாசி மணிகளைக் கழற்றுகிறாள், பின் தலையை மறைக்கும் செம்பருத்திப் பூக்களை எடுக்கிறாள். பிறகு, தலைக்குள் நுழையப்போன ஜாக்கெட்டை வீசியடிக்கிறாள். வீசிப்போட்ட பாசி மணிகளைக் கழுத்திற்கு, கருக்குகளாக்கிக் கொள்கிறாள்.

மரப் பெட்டியில் கலைந்து கிடந்த புடவையையும், இரண்டு கைப் பகுதிகளும் கருட்டி நிற்கக் கையில்லாத பொம்மைபோல் கிடந்த ஜாக்கெட்டையும் பார்க்கப் பார்க்க, அவளுக்குக் கோபம் கோபமாக வந்தது. திட்டுப் பகுதியில் வாயில் கொக மொய்க்கத் தூங்கும் ஒரு வயதுப் பயல் மேல் அந்தப் புடவையை எடுத்து மூடப் போனாள்.

அவளால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஒரு முடிவுக்கு வரும்படி சொன்ன சிக்கையா மேல், மனதுக்குள் சீறுகிறாள். அவன், நேற்று மெல்லச் சொன்ன வார்த்தைகள், காதுகளில் இப்போதோ துள்ளத் துடிக்கக் கேட்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஈச்சம்பாய்.pdf/113&oldid=1371646" இலிருந்து மீள்விக்கப்பட்டது